புதுச்சேரி, நவ. 11: புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள பேஷன் ஜூவல்லரி கடை ஒன்றில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் குடிபோதையில் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பணியில் இருந்த பெண்ணிடம் தீப்பெட்டி கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து கடையிலிருந்த சிசிடிவி கேமராகட்சி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியது. அதில் அந்த நபரிடம் வெளியே போங்கண்ணா… என கடையில் வேலை பார்க்கும் பெண்கள் கெஞ்சினாலும், அதை அந்த நபர் காதில் வாங்கவில்லை. இந்த காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இச்சம்பவம் குறித்து சந்திரசேகர், பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிந்து, அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து கடையில் புகுந்து ரகளை செய்த நபரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த பழனி (45) என்பதும், புகைப்பட கலைஞரான இவர் விடுமுறைக்கு புதுவைக்கு வந்தபோது மதுபோதையில், பேஷன் ஜூவல்லரி கடைக்குள் புகுந்து தகராறு செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
* பெண்கள் நம் நாட்டின் கண்கள்’ சுற்றுலா பயணி மன்னிப்பு வீடியோ
பெரியகடை போலீசார் வெளியிட்டுள்ள வீடியோவில், கைது செய்யப்பட்ட பழனி பேசும்போது, சென்னையிலிருந்து நேற்று (நேற்று முன்தினம்) புதுவைக்கு வந்தேன். அப்போது அதிக மதுபோதையில் நகரப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று, அங்குள்ள 3 பெண் ஊழியர்களிடம் தப்பாக பேசிவிட்டேன். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது என்றும், அந்த 3 பெண்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தொடர்ந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். பெண்கள் நம் நாட்டின் கண்கள். என்னை மன்னித்து விடுங்கள், என பேசியுள்ளார்.
The post புதுவையில் கடைக்குள் புகுந்து ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் சுற்றுலா பயணி அதிரடி கைது appeared first on Dinakaran.