சென்னை: சென்னையில் 2013ம் ஆண்டு இடிமுரசு இளங்கோ என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வியாசர்பாடி, பி.வி.காலனியை சேர்ந்த அறிவழகன் (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அறிவழகன், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தி ஆஜராகாமல் தலைமறைவானதால், இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அறிவழகனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 9ம் தேதி காலை பனந்தோப்பு ரயில்வே காலனி அருகே அறிவழகன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், வெங்கடேஸ்வரன், தலைமை காவலர் சலீம் மற்றும் முதல்நிலை காவலர் ஆண்டனி பிரேம்குமார் ஆகியோர் பனந்தோப்பு ரயில்வே காலனி அருகே சென்றபோது, போலீசாரை பார்த்ததும் அறிவழகன் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் போலீசாரை மிரட்டிய போது, தனிப்படை போலீசார் துப்பாக்கியால் அறிவழகனின் காலில் சுட்டு பிடித்தனர். அறிவழகன் சிகிச்சைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அருண் தனிப்டை போலீசாரை நேற்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
The post கொலை குற்றவாளியை சுட்டு பிடித்த தனிப்படைக்கு கமிஷனர் பாராட்டு: நேரில் அழைத்து வெகுமதி appeared first on Dinakaran.