×

திருவொற்றியூரில் ரூ.10 கோடியில் நவீன மார்க்கெட்: வியாபாரிகளிடம் கருத்துக்கேட்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மார்க்கெட் லைன் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மீன், இறைச்சி, காய்கறிகள், பழம் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதுமான அடிப்படை வசதி இல்லை. இங்கு பயன்படுத்தப்படும் கழிவுநீர் சீராக வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே அடிக்கடி தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மார்க்கெட் பகுதியை 2573 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் கட்டமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் புதிய மார்க்கெட் வளாகம் அமைப்பது குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் மண்டல அலுவலகத்தில், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்தது. மண்டல உதவி ஆணையர் புருஷோத்தமன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஆதிகுருசாமி, பட்டினத்தார் கோயில் வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் காய்கறி முருகன், நிர்வாகிகள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ஜினோராஜ், பொருளாளர் சந்திரசேகர் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது வளாகத்தில் அமைய உள்ள கடைகளின் அளவுகள், அடிப்படை வசதிகள், பார்க்கிங் போன்றவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வியாபாரிகள் முன் வைத்தனர். வியாபாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில் நவீன முறையில் மார்க்கெட் வளாகம் கட்டப்படும் என்று மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு உறுதியளித்தார்.

The post திருவொற்றியூரில் ரூ.10 கோடியில் நவீன மார்க்கெட்: வியாபாரிகளிடம் கருத்துக்கேட்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Thiruvottiyur ,
× RELATED திருவொற்றியூர் சாலையோரம் ஏடிஎம்...