×

வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் மின் புதைவட திட்ட பணிகள் இந்த ஆண்டில் முடிக்கப்படும்: பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா (காங்கிரஸ்) பேசுகையில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் மூலமாக வேளச்சேரிக்கு ரூ.47.17 கோடியில் மின் கம்பிகளுக்கு பதிலாக, புதைவடமாக மாற்றி இருக்கிறீர்கள். இருப்பினும் புதைவட கம்பிகளாக ஆனபிறகு, அந்த உயர் மின் கம்பிகளை கழற்றாமல், புதைவட கேபிள்களை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், மாடர்ன் டிரான்ஸ்பார்மர்ஸ் அமைக்காமல் இருக்கிறார்கள்.

அதனால் இந்த மழைக்காலத்தில், ஒரு கம்பி விழுந்து, ஓர் உயிரிழப்பு ஏற்பட்டது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினார். தயவுகூர்ந்து ஒரு ஆய்வு செய்ய எங்களோடு வந்து, இங்கு என்ன வேலை செய்திருக்கிறீர்கள், மேலே இருக்கிற உயர் மின்கம்பிகளை எப்போது கழற்றிவிட்டு, புதைவட கேபிள்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறீர்கள். ஏற்கனவே அக்டிவ் ஆனது எப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், சென்னை மாநகராட்சி பகுதியில் குறிப்பாக உறுப்பினருடைய சட்டமன்ற தொகுதியில் தான் மின்வாரிய பணிகள் அதிகமாக தேவைப்படுகிறது. தொடர்ச்சியாக அந்த பணிகள் முன்னுரிமை கொடுத்து, செய்யப்பட்டு வருகிறது. மீதம் இருக்கக்கூடிய பணிகளும் கடந்த ஆய்வுக்கூட்டங்களில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் முழுமையாக அந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே விரைந்து அந்த பணிகள் அனைத்தும் இந்த ஆண்டில் முழுமையாக முடிக்கப்படும், என்றார்.

The post வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் மின் புதைவட திட்ட பணிகள் இந்த ஆண்டில் முடிக்கப்படும்: பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Velachery Assembly Constituency ,Minister ,Senthil Balaji ,Assembly ,CHENNAI ,Velachery ,MLA ,Asan Maulana ,Congress ,Constituency ,Senthilbalaji ,Dinakaran ,
× RELATED அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான...