×

பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்த குப்பை கழிவுகளை மறுசுழற்சி செய்து வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு: மாநகராட்சி அசத்தல்


சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து பயோ மைனிங் முறையில் பிரித்தெடுக்கப்பட்ட குப்பையை பயன்படுத்தி வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. சென்னை மாநராட்சியின் 15 மண்டலங்களிலும் தினசரி சேகரிக்கப்படும் தலா 3200 மெட்ரிக் டன் ஈரம் மற்றும் 2450 மெட்ரிக் டன் உலர் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பரவலாக்கப்பட்ட மையங்கள் நிறுவப்பட்டு உள்ளது. மேலும் தினசரி 500 மெட்ரிக் டன் அளவில் பயனற்ற கழிவுகள் தெருக்கள் மற்றும் சாலைகளின் ஓரங்கள் சுத்தம் செய்வதன் மூலம் உற்பத்தியாகிறது.

சென்னை மாநராட்சியில், உற்பத்தி ஆகும் இடத்தில் குப்பை கழிவுகளை தரம் பிரிப்பதை அமல்படுத்துவதற்கு தகவல், கல்வி மற்றும் தொடர்பு செயல்களின் மூலம் தொடர் விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்ளில், 10 மண்டலங்ளில் தினசரி தூய்மை பணியை மேற்கொள்வதற்கு உர்பேசர் சுமித் மற்றும் சென்னை என்விரோ சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தார் ஆகிய தனியார்கள் வசம் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 5 மண்டலங்களில் சென்னை மாநராட்சியின் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சென்னை மாநராட்சியில் தினசரி உற்பத்தியாகும் 1020 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகள், நுண் உரம் நிலையம், தோட்டக்கழிவுகள் மற்றும் இளநீர் குடுவைகள் மறுசுழற்சி மையம், காற்று புகும் வகையில் உரம் தயாரிக்கும் நிலையம் மற்றும் உயிரி எரிவாயு நிலையங்கள் போன்ற பரவலாக்கப்பட்ட நிலையங்கள் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

மேலும் தினசரி உற்பதியாகும் 560 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் விஞ்ஞான ரீதியிலான எரியூட்டும் நிலையம், வளங்கள் மீட்பு மையம்/ பொருட்கள் மீட்பு மையம் போன்ற மையங்களில் மறுசுழற்சிக்குரியவை முழுமையாக பிரித்தெடுக்கப்படுகிறது. மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய உலர்கழிவுகள் சிப்பங்களாக கட்டப்பட்டு சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டு கூட்டு எரிபொருளாக பயன்படுகிறது. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் 35 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த குப்பை கொட்டும் வளாகம் சுமார் 225.16 ஏக்கர் பரப்புளவில் அமைந்துள்ளது. சென்னை மாநகராட்சி பயோ மைனிங் முறையில் நிலத்தினை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டது. பயோ மைனிங் முறையில் பல வருடங்களாக கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள் விஞ்ஞான முறையில் பதப்படுத்தப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் இதர உதிரி பொருட்களை பெரும்பான்மையான அளவில் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் உபயோகப்படுத்தவும் விஞ்ஞான முறையில் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த குப்பை கொட்டும் வளாகத்தில் சாலை மட்டத்திற்கு மேலாக சுமார் 34.02 லட்சம் கன மீட்டர் அளவிற்கு குப்பை கொட்டப்பட்டுள்ளது. பயோ மைனிங் முறையில் பணிகளை சிறப்பாகவும் விரைவாகவும் முடிக்கும் விதமாக 6 சிப்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் மொத்த காலம் 3 ஆண்டுகள் ஆகும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.350.64 கோடி. இந்த நிலையில் பெருங்குடி குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை பயன்படுத்தி நாற்காலி, அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் மரம் மூலம் தயாரிக்கப்பட்ட வந்த பொருட்களை தற்போது குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பெருங்குடி குப்பை கிடங்கில், பயோ மைனிங் திட்டம் 96 ஏக்கர் அளவில் தொடங்கப்பட்டது. அதில் 1.7 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவில் குப்பை இருந்தது, அதனை நிலமாக மீட்கப்பட்டது. குறிப்பாக ஒரு நாளுக்கு 100 டன் என்ற அளவில் குப்பை கழிவுகள் பயோ மைனிங் செய்யப்பட்டது.

இந்த பயோ மைனிங் செய்யும் போது, குப்பையிலே இருந்த பிளாஸ்டிக் தனியாகவும், காந்தத்தை பயன்படுத்தி இரும்பை தனியாகவும், கல்லை தனியாகவும் பிரிக்கப்பட்டது. பயோ மைனிங் செய்யப்பட்டதில் 20 சதவீதம் குப்பை பிளாஸ்டிக் ஆகவும் ரப்பராகவும் மாற்றப்பட்டது. 10 சதவீத குப்பை பேப்பர்கள், துணிகள், கட்டைகளாகவும் மாற்றப்பட்டது. மேலும் கற்களை ஒரு தனியார் நிறுவனம் சுழற்சி செய்ய எடுத்துக் கொண்டது.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், ஸ்டைல்கள் மற்றும் கட்டைகளை நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக 2031 டன் ஸ்டீல்கள் சமையலறையில் பயன்படுத்தக்கூடிய கரண்டி உள்ளிட்டவை தயாரிக்க அனுப்பப்பட்டுள்ளது. 3454 டன் கண்ணாடிகள் பாட்டில்களாக தயாரிக்கப்பட உள்ளது. மேலும் 2.18 மில்லியன் டன் கற்களை பாதை அமைக்கும் கற்களாக வடிவமைக்கப்பட உள்ளது. மேலும் மீட்கப்பட்டுள்ள நிலத்தில் பூங்காக்கள் ஏரிகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது,’’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* 2031 டன் ஸ்டீல்கள் சமையலறையில் பயன் படுத்தக் கூடிய பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது.

* 3454 டன் கண்ணாடி கழிவுகளில் பாட்டில்களாக மாற்றப்பட உள்ளது.

* 2.18 மில்லியன் டன் கற்களை பாதை அமைக்கும் கற்களாக வடிவமைக்கப்பட உள்ளது.

 

The post பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்த குப்பை கழிவுகளை மறுசுழற்சி செய்து வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு: மாநகராட்சி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Berungudi Garbage Warehouse ,Chennai ,Perunkudi Garbage Warehouse ,Dinakaran ,
× RELATED முன்னாள் காதலியை தாக்கிய கல்லூரி மாணவர் கைது..!!