விஎச்பி விழாவில் சர்ச்சை கருத்து நீதிபதி பேச்சு விவரங்களை வழங்க அலகாபாத் ஐகோர்ட்டுக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்தின் சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற பிரிவு சார்பில் உபி அலகாபாத் உயர் நீதிமன்ற நூலக அரங்கில் பயிலரங்கம் கடந்த 8ம் தேதி நடத்தப்பட்டது. அதில், ‘பொது சிவில் சட்டம்’ தொடர்பான தலைப்பில் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், ‘சமூக நல்லிணக்கம், பாலின சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை மேம்படுத்துவதே பொது சிவில் சட்டத்தின் முக்கிய நோக்கம்’ என கூறியிருந்தார்.

அதற்கு அடுத்த நாள் சமூக ஊடகங்களில் நீதிபதி சேகர் குமார் பேசிய வீடியோக்கள் வெளியாகின. அதில் அவர், ‘பெரும்பான்மையினருக்கு ஏற்ப சட்டம் செயல்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது வெறுப்புணர்வை பரப்பும் பேச்சு என பல்வேறு எதிர்க்கட்சிகளும் பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிபதி சேகர் குமார் யாதவ்வின் நடத்தை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென நீதித்துறை பொறுப்புடைமை மற்றும் சீர்த்திருத்தங்களுக்கான பிரச்சாரம் என்கிற தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு கடிதம் எழுதியது.

அந்த அமைப்பின் வழக்கறிஞரும், ஒருங்கிணைப்பாளருமான பிரசாந்த் பூஷண் எழுதிய கடிதத்தில், நீதிபதியின் பேச்சு நீதித்துறை நெறிமுறைகளை மீறியதாகவும், தேசத்தின் பாரபட்சமற்ற தன்மை மற்றும் மதச்சார்பின்மையின் அரசியலமைப்பு கோட்பாடுகளை மீறுவதாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதே போல, நீதிபதி சேகர் குமார் யாதவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்றம் நேற்று கவனத்தில் எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், ‘அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேச்சை செய்தித்தாள் செய்திகளின் மூலமாக நீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது. நீதிபதியின் பேச்சு தொடர்பான விவர அறிக்கையை வழங்குமாறு அலகாபாத் உயர் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

* பதவி நீக்கம் செய்ய கபில் சிபில் அழைப்பு
நீதிபதி சேகர் குமார் யாதவ் சர்ச்சை பேச்சு மூலம், பதவிப்பிரமாணத்தை மீறியதற்காக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர மாநிலங்களவை எம்பி கபில் சிபல் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்களுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறி உள்ளார். இதனால் நாடாளுமன்றத்தில் அடுத்த ஓரிரு நாட்களில் நோட்டீஸ் கொண்டு வர வாய்ப்புள்ளது.

இது குறித்து நேற்று பேட்டி அளித்த கபில் சிபல், ‘‘எந்த நீதிபதியும் இப்படி பேசுவது பதவிப் பிரமாணத்தை மீறும் செயலாகும். இதனால், நீதிபதி நாற்காலியில் இனியும் உட்கார அவருக்கு உரிமை இல்லை. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியால் எப்படி இவ்வாறு பேச முடியும்? முதலில் இப்படிப்பட்டவர்களை எப்படி நியமிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அவர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது? கடந்த 10 ஆண்டாக இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது’’ என்றார்.

* மன்னிப்பு கேட்க மாட்டேன்
விஎச்பி தலைவர் அலோக் குமார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எந்த அடிப்படையில் பெரும்பான்மை என்கிற வார்த்தையை நீதிபதி சேகர் குமார் யாதவ் பயன்படுத்தினார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவர் ‘பெரும்பான்மையினருக்கு ஏற்ப சட்டம் செயல்பட வேண்டும்’ என்று கூறியிருந்தால் கூட அதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். அவருடைய அந்தக் கருத்துக்களை என்னால் அங்கீகரிக்க முடியாது என்றாலும், சிறுபான்மையினரின் உணர்வுகளைப் போலவே பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளும் உணர்ச்சிகளும் மதிக்கப்பட வேண்டியவையே’’ என்றார்.

The post விஎச்பி விழாவில் சர்ச்சை கருத்து நீதிபதி பேச்சு விவரங்களை வழங்க அலகாபாத் ஐகோர்ட்டுக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: