நன்றி குங்குமம் டாக்டர்
கடந்த 20 ஆண்டுகளில் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை என்பது மக்களுக்கு பரிச்சயமான ஒன்றாக மாறியுள்ளது. அதேசமயம், பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை என்றதும், அழகியல் சார்ந்த அறுவைசிகிச்சை என்றே பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால், பிறப்பு முதல் இறப்பு வரை உயிர் காக்கும் உன்னத அறுவை சிகிச்சைகளும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் மேற்கொள்ளப்படுகிறது என்பதை பெரும்பாலும் யாரும் அறிவதில்லை. அந்தவகையில், பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை என்றால் என்ன.. பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை எங்கெல்லாம் பயன்படுகிறது, யாருக்கெல்லாம் தேவைப்படுகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மூத்த பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணரான மருத்துவர் ஆர். ராம்குமார்.
பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை என்றால் என்ன..
பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை என்பது மனித உடலின் மறுசீரமைப்பு, புனரமைப்பு அல்லது மாற்றத்தை உள்ளடக்கிய ஒரு சிறப்பு அறுவைசிகிச்சை என்று சொல்லலாம். இதில் பிளாஸ்டிக் என்பது கிரேக்க மொழியில் இருந்து வந்த வார்த்தையாகும். அதன் பொருள் வார்ப்பு அல்லது வடிவமைப்பு என்பதாகும். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை மற்றொன்று அழகியல் அறுவைசிகிச்சை ஆகும். இதில் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையானது பிறப்பு குறைபாடுகள், விபத்துகள், தீக்காயங்கள், புற்றுநோய் சிகிச்சை, எலும்பு முறிவுகள், கை மற்றும் கால் நுண் அறுவைசிகிச்சை உட்பட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது.
இந்த வகை அறுவைசிகிச்சை உடல் பாகத்தை மீட்டெடுப்பதில் அல்லது அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அழகியல் அறுவை சிகிச்சையானது, உடல் தோற்றத்தை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது தவிர, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் இன்றியமையாத அம்சம் என்னவென்றால், திசு இடமாற்றத் திறன் தேவைப்படும் நிலைமைகளின் சிகிச்சையை உள்ளடக்கியது.
பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை யாருக்கெல்லாம் தேவைப்படும்..
பொதுவாக பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை என்றதும் அழகை மேம்படுத்த செய்யப்படும் அறுவைசிகிச்சை என்றே பலரும் நினைக்கிறார்கள். அதிலும், குறிப்பாக நடிகர், நடிகைகள் செய்து கொள்வது என்றே நினைக்கிறார்கள். ஆனால், அது மட்டுமே பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை இல்லை. ஒரு குழந்தை பிறக்கும்போது உடல் பாகங்களில் ஏதேனும் குறைபாடுடன் பிறந்தால், அந்த உடல் பாகங்களை சரி செய்வதற்கும் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது. உதாரணமாக, அண்ணப்பிளவு உதட்டுடன் பிறப்பது, சிதைந்த மூக்கு, அசாதாரண கைகள் போன்ற உடல் பாகங்களில் எந்த குறைபாடுகளுடன் பிறந்தாலும் அதை முடிந்தவரை சரி செய்து சீரமைப்பதாகும்.
அதுபோன்று விபத்துகளில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள் சிதைந்திருந்தால் அதனை சரி செய்து மறுசீரமைப்பு செய்வதாகும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு பாகத்தில் எலும்புகள் உடைந்து சிதைந்திருந்தால், அவரது உடலில் வேறு பாகத்தில் இருந்து எலும்புகளை எடுத்துவந்து சிதைந்த இடத்தில் வைத்து பொருத்துவது. தோல்கள் சிதைந்திருந்தால், அவரது உடலில் இருந்தே வேறு இடத்தில் இருந்து தோலை கொண்டு வந்து வைப்பது, சதை இழந்திருந்தால் சதையை வைப்பது. கை, கால்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்வது.
அதுபோன்று தீக்காயங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் மிக முக்கியமானது. பொதுவாக, தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு, ஒரு பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் சிகிச்சையளிக்கும்போது, அவர்களை விரைவாகவும், அவர்கள் முன்பிருந்த தோற்றத்தை முடிந்தவரை மீண்டும் மீட்டெடுக்கவும் முடியும். அதுபோன்று, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இருந்து நீக்கப்பட்ட சதைகளை சீரமைப்பது போன்ற பலவித சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சமீபகாலமாக, சர்க்கரை நோயினால், கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்போது சிகிச்சை அளித்து வருகிறோம்.
இது தவிர, அழகியல் சார்ந்த அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மூக்கு கோணலாக இருந்தால் அதனை சரி செய்வது, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகப்படியாக இருந்தால், அதனை உறிந்து எடுத்து நீக்குவது. ஹேர் டிரான்ஸ்பிளன்டேஷன் போன்ற பல சிகிச்சை முறைகள் இருக்கின்றது. முந்தைய காலங்களில் காஸ்மடிக் அறுவைசிகிச்சை மேற்கொள்ள மும்பைக்குதான் பலரும் செல்வார்கள். இப்போது அப்படியில்லை சென்னையிலும், காஸ்மடிக் சார்ந்த நிறைய நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் வந்துவிட்டது. அதற்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் பலவித சிகிச்சை முறைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒருவர் விபத்தில் சிக்கினால் உடனடியாக மேற்கொள்ள வேண்டியவை என்ன..
விபத்து எனும்போது, பொதுவாக நாம் பார்க்கும் விஷயம் என்னவென்றால், முன்பெல்லாம், பலரும் அருகில் செல்லவே பயப்படுவார்கள். ஆனால், இன்றைய சூழலில் மக்களிடையே சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு இடத்தில் ஒருவருக்கு விபத்து நேர்ந்துவிட்டால், உடனே அருகில் இருப்பவர்கள், 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துவிடுகிறார்கள். ஆம்புலன்ஸும் பத்து நிமிடங்களில் வந்து விடுகிறது. இது மிகவும் வரவேற்கத் தக்க விஷயம் இதன்மூலம் எத்தனையோ உயிர்கள் காக்கப்படுகின்றன.
பொதுவாக, விபத்துக்கால முதலுதவி என்பது கோல்டன் ஹவர் என்று சொல்லக்கூடிய முதல் ஒருமணி நேரமே. அதற்குள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையை தொடங்கி விட்டால், முடிந்தவரை அவரை காப்பாற்றிவிடலாம். அதேசமயம், விபத்தினால் மூளையோ, இதயமோ, நுரையீரலோ பலமாக சேதப்பட்டிருந்தால் மட்டுமே அவரை காப்பாற்றுவது கடினம். மற்றபடி வேறு எந்த பாதிப்பாக இருந்தாலும், முடிந்தவரை காப்பாற்றிவிட முடியும். எனவே, விபத்துக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய உடனடி வழிமுறைகள் குறித்து மக்களுக்கு இன்னும் கூடுதலான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
சமீபகாலமாக கார் விபத்துகள்தான் அதிகரித்து வருகிறது. எனவே கார்களை பயன்படுத்துவோர் ஏர் பேக்ஸ் உள்ள கார்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும்.
மேலும், மிக மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது போக்குவரத்து விதிமுறைகள். ஏனென்றால், சாலைவிதிகளை மீறும் போதுதான் விபத்துகள் நிகழ்கிறது. இதில் வருந்த தக்க விஷயம் என்னவென்றால், கடந்த இருபது ஆண்டுகளில் சாலைகளில் எத்தனையோ முன்னேற்றங்கள் கொண்டு வந்தும், சாலை விபத்துக்கள் இந்தியாவில் அதிகம் நிகழ்கிறது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழும் இதுபோன்ற விபத்துகள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது. எனவே, மக்களிடம் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட்டால் சாலை விபத்துக்கள் குறையும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post என்ன விலை அழகே? ப்ளாஸ்டிக் சர்ஜரி கைடு! appeared first on Dinakaran.