×

சகுந்தன்

பகுதி 1

புண்ணிய பூமிகளில் மிகவும் உயர்ந்ததென்று புகழப்படும் காசி. அத்திருத்தலத்தைச் சகுந்தன் எனும் மன்னர் ஆண்டு வந்தார். குடிமக்கள் அனைவரையும் தன் குழந்தைகளைப் போலவே எண்ணிப் பாதுகாத்து, நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். மக்களும் குறை ஒன்றும் இல்லாமல், மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஒருநாள்… மக்கள் பலர் அரண் மனைக்கு வந்தார்கள். அதை பார்த்த மன்னருக்கு, ஒன்றும் புரிய வில்லை.‘‘மக்களே! இவ்வளவு பேர்களும் என்னைப் பார்க்க அரண்மனைக்கே வந்திருக்கிறீர்கள் என்றால், ஏதோ முக்கியமானதாக இருக்க வேண்டும்.

என்ன நடந்தது? நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்!’’ என்றார், மன்னர்.‘‘மன்னா! கொடிய காட்டு விலங்குகள் கூட்டங்கூட்டமாக வந்து, பயிர்களை அழிக்கின்றன. எங்களையும் தாக்குகின்றன.அந்தக் கொடிய விலங்குகளைக் கொன்று, எங்களைக் காக்க வேண்டும்!’’ என வேண்டினார்கள் மக்கள். அவர்களுக்கு ஆறுதல் சொன்ன அரசர், ‘‘நீங்கள் பயமில்லாமல் செல்லுங்கள்! அந்தக் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொல்கிறேன்’’ என்று கர்ஜித்தார், அரசர்.

அனைவரும் அமைதியாகத் திரும்பினார்கள். அரசர் உடனே அமைச்சரை அழைத்து, ‘‘வேட்டைக்குப் போக வேண்டும். வேடர்களைத் தயாராக இருக்கச் சொல்லுங்கள்!’’ என்றார். வேடர்களும் தயார் ஆனார்கள். அனைவரும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்கள். அங்கே வேடர்கள் கொம்பு முதலான வாத்தியங்களை ஊதி, கைகளில் உள்ள கம்பு – நீளமான ஈட்டி ஆகியவற்றால் புதர்களில் குத்தி, மறைந்திருந்த காட்டு விலங்குகளை வெளிப் படுத்தினார்கள். மன்னர், மந்திரி என அனைவரும் கடுமையாக வேட்டையாடினார்கள். அப்போது ஒரு பெரும்புலி ஓட, மன்னரும் மந்திரியும் புலியைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள்; நீண்ட தூரம் சென்றுவிட்டார்கள்.

நீண்ட நேரமாக உணவு இல்லாததாலும், கடுமையாக வேட்டையாடியதாலும், களைப்புற்ற மன்னர், அப்படியே தரையில் சாய்ந்தார். அதைப் பார்த்த அமைச்சர் பதறிப்போய், அரசருக்கு முதலுதவி செய்தார். சற்று நேரத்தில் மன்னர் மயக்கம் தெளிந்தார். அதன் பின் ஒரு வழியாக மன்னரும் மந்திரியும் அங்கிருந்து புறப்படத் தயாரானார்கள். அப்போது இனிமையான வீணை நாதம் கேட்டது.அதைக் கேட்டு அரசரும் அமைச்சரும் நின்றார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே நாரத முனிவர் வந்தார்.

குல குருவாகிய நாரதரைக் கண்டதும் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார் மன்னர். இயன்ற உபசாரங்களையும் செய்தார். அதன்பின், ‘‘குருநாதா! தாங்கள் இந்தக் காட்டிற்கு வந்ததன் காரணத்தை அறியலாமா நான்?’’ என்று மன்னர் கேட்க, ‘‘சகுந்தா! இங்கே அருகில் உள்ள வனத்தில் முனிவர்கள் பலர் யாகம் செய்கிறார்கள். அதைப் பார்ப்பதற்காகவே வந்தேன்’’ என்றார் நாரதர். மன்னர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது;‘‘குருநாதா! அந்த யாகத்தில் அடியேனும் கலந்துகொண்டு, அந்த முனிவர்களை வணங்கலாமா?’’ என்று கேட்டார் மன்னர். நாரதர் அனுமதி அளித்து அங்கிருந்து நகர்ந்தார். அரசரும் அமைச்சரும் நாரதரைப் பின் தொடர்ந்தார்கள்.

அனைவரும் யாகம் நடக்கும் இடத்தை அடைந்தார்கள். அங்கே வசிஷ்டர் முன்னிலை வகிக்க, கௌசிகர் முதலான முனிவர்கள் பலர் அமர்ந்திருந்தார்கள். அவர்களையெல்லாம் பார்த்த அரசர், ‘‘ஆகா! இவ்…வளவு முனிவர்களையும் ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் தரிசித்தது, நான் செய்த பெரும் பாக்கியம்! பெரும் பாக்கியம்! அனைவரையும் நமஸ்கரிக்கின்றேன் நான்’’ என்று சொல்லி, அனைவர்க்கும் முன்னால் அமர்ந்திருந்த வசிஷ்டரை நமஸ்காரம் செய்தார். அதன்பின் அரசர் அங்கிருந்து அரண்மனை திரும்பிவிட்டார். கௌசிக முனிவரின் முகமும் திரும்பியது. அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அவர் முகம் சிவந்தது; கடுங்கோபத்தை வெளிப்படுத்தியது.

அதைக் கண்ட நாரதர், ‘‘அரசனாக இருந்தாலும், அவன் அறிவு இல்லாதவன்தான்!’’ என்றார். கௌசிகரின் கோபம் அதிகமானது; ‘‘நாரத முனிவரே! அந்த அரசன் சகுந்தன் இன்னும் என் மேன்மையைப் புரிந்து கொள்ள வில்லை போலிருக்கிறது. இருக்கட்டும்! இருக்கட்டும்! அவன் என்ன பாடு படப் போகிறான் என்பதைப் பாருங்கள்! அரிச்சந்திரனும் அவன் முக்கியமாக நினைத்த அந்த வசிஷ்டரும், என்னிடம் பட்ட துயரங்களை அந்தச் சகுந்தன் அறியவில்லை போலிருக்கிறது’’ என்றார்.

நாரதரும் சும்மாயிருக்க வில்லை; ‘‘முனிவரே! நீங்கள் சொன்னதைச் செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அந்தச் சகுந்தன், ஏதோ விவரம் தெரியாமல் செய்துவிட்டான். அவனிடம் பரிதாபம் கொள்ள வேண்டிய நீங்கள், அதை விட்டுவிட்டு அவனிடம் கோபம் கொள்கிறீர்களே! இதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’’ என்றார். கௌசிகருக்குக் கோபம் அதிகமானது; ‘‘அப்படிச் சொல்லாதீர்கள்! அந்தச் சகுந்தனைத் தண்டிக்காமல் விடுவது, எனக்கு அழகில்லையென்றே நினைக்கிறேன்’’ என்றார். நாரதர் தொடர்ந்தார்; ‘‘நீங்கள் சொல்வது உண்மைதான்.

ஆனாலும் முனிவரான நீங்கள்போய், அரசனான அவனைத் தண்டிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா?’’ என்றார்.‘‘என்ன நாரதரே! இப்படிச் சொல்லிவிட்டீர்கள்! சர்வ வல்லமை பொருந்திய ராமன் எனக்குச் சீடனாக இருக்கும்போது, எதுவுமே எனக்குப் பெரிதில்லை என்பதை மறந்து விட்டீர்களா?’’ என்று கேட்டார் கௌசிகர்.‘‘இல்லை இல்லை. உங்களால் முடியாதது எதுவுமில்லை. ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் அந்தச் சகுந்தன், உங்கள் சீடனான ராமனுக்கு உகந்த பக்தனாயிற்றே’’ எனக்கேட்டார் நாரதர்.‘‘இருந்தாலென்ன? அவனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம்? சொல்லுங்கள்!’’ என்றார் கௌசிகர்.‘‘இதற்குப்போய் யோசிக்க வேண்டுமா என்ன? சகுந்தனைப் போன்றவர்க்கெல்லாம் மரண தண்டனையே உகந்தது.

நீங்கள் உடனே ராமனிடம் சென்று, ‘இந்தச் சகுந்தன் தலை நாளை காலைக்குள் என் காலில் விழ வேண்டும்’ எனக் கேளுங்கள்! அதுதான் சகுந்தனுக்குச் சரியான தண்டனை’’ என்றார் நாரதர். கௌசிகர் சந்தோஷப்பட்டார்; ‘‘நாரதரே! என்ன இருந்தாலும் நீங்கள் பிரம்ம புத்திரர் அல்லவா! திரிலோக சஞ்சாரி நீங்கள்! அனைவரும் மகிழும்படி இன்னிசை பாடும் தத்துவ ஞானி எனும் பெயர், உங்களுக்குத் தகும். நீங்கள் சொன்னதே, அந்தச் சகுந்தனுக்குச் சரியான தண்டனை! இப்போதே நான் ராமனிடம் போய், அதற்குண்டான ஏற்பாட்டைச் செய்கிறேன்’’ என்ற கௌசிகர் உடனே எழுந்தார்.

நாரதரும் அங்கிருந்து அகன்றார். புறப்பட்ட கௌசிகர் நேரே ராமரிடம் போனார். அவர் போன நேரத்தில், ராமரும் சீதையும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, சகோதரர்களெல்லாம் சுற்றி நன்றிருந்தார்கள். கௌசிகர் வந்த தகவலைக் காவலர்கள் மூலம் அறிந்த ராமர், ஓடோடி வந்து கெளசிகரை வரவேற்றார்.‘‘குருநாதா! குருநாதா! தங்கள் வருகையால் நான் பாக்கியசாலியானேன்! பாக்கியசாலியானேன்!’’ என்று சொல்லிக் கௌசிகரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் ராமர்; உள்ளே அழைத்துப் போய்ச் சிம்மாசனத்தில் அமர வைத்து, உபசாரங்கள் செய்தார். அப்போது நாரதரும் அங்கு வந்தார்.கௌசிகர், தான் வந்த காரியத்தைச் சொல்லி, ‘‘ராமா! அந்தச் சகுந்தன் தலை, நாளை காலை, என் காலில் விழ வேண்டும்!’’ என்றார். உடனே ராமர், ‘‘சத்துருக்கனா! நீ போய் அந்தக் காசி மன்னன் சகுந்தனின் தலையைக் கொண்டு வா! படைகளுடன் போ!’’ என்று உத்தரவிட்டார். சத்துருக் கனன் படைகளுடன் புறப்பட்டார்.

அதே சமயம் நாரதர் வெகுவேகமாகச் சகுந்தனிடம் போனார். அவரைக்கண்ட சகுந்தன் பரபரப்பானார்; ‘மிகவும் உத்தமமானவர் நாரதர்! அவர்போய் என்னைத்தேடி வந்திருக்கிறார் என்றால், ஏதோ முக்கியமானதாக இருக்க வேண்டும்’ என்று எண்ணி, நாரதரைச் சகல மரியாதைகளுடன் வரவேற்று, ‘‘மாமுனிவரே! தங்கள் வருகைக்கான காரியத்தை அறியலாமா?’’ எனப் பணிவோடு கேட்டார். அயோத்தி அரண்மனையில் நடந்தவற்றையெல்லாம் சொன்ன நாரதர், ‘‘சகுந்தா! கௌசிகரின் எண்ணப்படி,  ராமரின் கட்டளைப்படி, சத்துருக்னன் உன் தலையை வாங்கப் படைகளுடன் புறப்பட்டு விட்டான்’’ என்று விவரித்தார்.சகுந்தன் பயப்பட வில்லை; ‘‘சுவாமி!

கௌசிகரைப் போன்ற மாமுனிவர்களின் கோபத்திற்கு ஆளான நான் இந்தப் பூமியில் இருப்பதை விட, ராமரின் தம்பி கையால் இறப்பதே நல்லது’’ என்றார்.அவருக்கு ஆறுதல் சொன்னார் நாரதர்; ‘‘மன்னா! இதற்கெல்லாம் போய் இப்படி இடிந்து போகலாமா? நீ அநியாயமாக இறந்தால், உன்னை நம்பியிருக்கும் மக்கள் என்ன செய்வார்கள்? ஆகையால் உனக்காக இல்லாவிட்டாலும் உன் குடிமக்களுக்காகவாவது, நீ உயிர் வாழ வேண்டும்.

அதற்கான வழியைத் தேடுவதே நல்லது’’ என்றார். சகுந்தன் மறுபடியும் நாரதரை வணங்கி, ‘‘சுவாமி! ராமருக்கு அபராதம் செய்த நான், இனி எப்படி உயிர் வாழ முடியும்? வாலி, ராவணன் முதலானவர்களையெல்லாம் அழித்த அந்த ராமரின் அம்பிற்கு முன்னால் நான் நிற்க முடியுமா?’’ என்றார். நாரதர் வழி சொன்னார்; ‘‘சகுந்தா! உனக்கு நான் ஒரு வழி சொல்கிறேன் கேள்! இதோ! இங்கிருந்து மேற்குப்பக்கமாகச் (12 கி.மீ.) சென்றால், அங்கே ஒரு காடு இருக்கும்.

அங்கே ஒரு குழியைத் தோண்டித் தீ வளர்த்து, நீ அந்தத் தீயை வலம் வா! அவ்வாறு வலம் வரும் போது, ‘அநியாயமாக இந்த அக்னிக்கு இரையாகப்போகும் என்னைக் காப்பாற்ற யாருமில்லையா?’ என்று புலம்பியபடியே வலம் செய்! ‘‘அப்போது அங்கே ஒரு தேவி தோன்றுவாள். உடனே நீ அவள் கால்களைப் பிடித்துக்கொள்! அவள் உனக்கு அபயம் கொடுப்பாள். அந்த நேரத்தில் நான் அங்கு வருவேன். தாமதம் செய்யாமல் உடனே புறப்படு நீ!’’ என்றார் நாரதர். சகுந்தனும் உடனே தன் ராஜ்ஜியப் பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்படைத்து விட்டுக் காட்டை நோக்கி நடந்தார்.நாரதரும் அங்கிருந்து அகன்றார்.

சகுந்தனும் நாரதர் குறிப்பிட்ட காட்டை அடைந்து தீ வளர்த்து, அதை வலம் வந்தார்; அவ்வாறு வலம் வரும்போது, ‘‘அநியாயமாக இப்படி நெருப்பில் விழுந்து இறக்கும் என்னைக்காப்பாற்ற இங்கே யாருமில்லையா?’’ என்று கத்தியபடியே வலம் வந்தார். அந்த அலறல் குரல் அக்காட்டில் இருந்த அஞ்சனா தேவியின் காதுகளில் விழுந்தது. அனுமாரின் தாயாரான அவர், சகுந்தனின் அலறல் கேட்டவுடன் இடி கேட்ட நாகம்போல நடுங்கி, வெகுவேமாகப் போய் சகுந்தனைத் தடுத்தார்; ‘‘அப்பா! நீ யாராக இருந்தாலும் சரி! உனக்கு நான் அபயம் கொடுத்தேன்! உன்னைக் காப்பாற்றுவேன். கவலைப்படாதே!’’ என்று சொல்லித் தடுத்தார்.

அதைக்கேட்ட சகுந்தன் உடனே அஞ்சனாதேவியின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தார். அதே வேளையில் நாரதரும், தான் ஏற்கனவே சொல்லியபடி அங்கு வந்தார். வந்தவர், ‘‘சகுந்தா! உலகமே புகழும் இந்த உத்தமியின் அருள் பெற்ற உனக்கினி ஒரு குறையுமில்லை. கவலைப்படாதே!’’ என்று ஆறுதல் சொன்னார். நாரதரைக்கண்ட அஞ்சனாதேவி அவரை வணங்கி வரவேற்றார். அவருக்கு ஆசி கூறிய நாரதர், ‘‘இந்தப்பக்கமாக வந்து கொண்டிருந்தேன். அலறல் கேட்டு இங்கு வந்தேன். வந்து பார்த்தால், சகுந்தன் அலறிக் கொண்டிருக்கிறான்’’ என்று சொல்லி, சகுந்தனுக்கு நேர்ந்த ஆபத்தையும் விரிவாகச் சொன்னார்.

அதைக்கேட்ட அஞ்சனாதேவி உடனே தன் காதுகளைப் பொத்திக்கொண்டு, ‘‘ராமா! ராமா!’’ என்று கூவினார்; கூடவே, ‘‘மா முனிவரே! என்ன இது? இந்தச் சகுந்தனை எப்படிக் காப்பாற்ற முடியும் என்னால்? நீங்கள் தான் இதற்கு ஏதாவது சொல்லி வழி காட்ட வேண்டும்’’ என்று வேண்டினார். ‘‘அஞ்சனா! உன் கவலைதீர நான் ஒரு வழி சொல்கிறேன். கேள்! உன் முகத்தில் மிகுதியான சோகம் தெரியும்படியாக உன் முகத்தை வைத்துக்கொண்டு, உன் பிள்ளையான அனுமானிடம், ‘நான் சொல்வதைச் செய்ய வேண்டும் நீ!செய்வாயா?’ என்று கேள்! அவன் ஒப்புக்கொண்ட பிறகு, நீ நடந்தவைகளைக் கூறு!.

அதன்பின் நடக்க வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார்.அஞ்சனா தேவியும் முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு, ஒரு பக்கமாக உட்கார்ந்தார். சகுந்தனை ஒரு மறைவிடத்தில் பதுங் கியிருக்கச் செய்த நாரதர், தானும் சற்று மறைந்தபடி நின்றார்.அஞ்சனாதேவி புலம்பத் தொடங்கினார்; ‘‘மகனே! ஆஞ்சநேயா! நான் என்ன செய்வேன்? நீ வந்து என் துயரைத் தீர்க்கமாட்டாயா?’’ என்று பெருங்குரலில் ஓலமிட்டார்.

அந்தக் குரல், ஆஞ்சநேயர் காதுகளில் விழுந்தது; ‘‘தாயாரின் குரலல்லவா இது? என்ன ஆயிற்றோ?’’ என்று பதறியபடியே ஓடி வந்தார்; தாயை வணங்கி, ‘‘அம்மா! அம்மா! என்ன ஆயிற்று? ஏன் இவ்வாறு கதறுகிறீர்கள்? ராமநாமம் இந்த உலகில் உள்ளவரை, நமக்குத் தீங்கு செய்யத் தேவர் களாலும் முடியாது. அப்படியிருக்க இன்று உங்கள் முகம் வாடியிருக்கக் காரணம் என்ன?’’ என்று பரிவோடு கேட்டார்.அஞ்சனாதேவி சொல்லத் தொடங்கினார்; ‘‘மகனே! ஆஞ்சநேயா! என் பேதமையாலும் முன் யோசனை இல்லாததாலும் உண்டான துயரம் இது’’ என்றார்.தாயின் முகத்தில் வடிந்த கண்ணீரைத் துடைத்து, ஆறுதல் சொன்னார் ஆஞ்சநேயர்; ‘‘அம்மா! அம்மா! என்னால் ஆகாத செயல் எதுவுமில்லை என்று நினைக்கிறேன் நான்.

உங்கள் துயரத்தைச் சொல்லுங்கள்! கண்டிப்பாகத் தீர்த்து வைக்கிறேன்’’ என்றார்.அந்த நேரம் பார்த்து, நாரதர் தன் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார்; அஞ்சனாதேவியை நெருங்கி, ‘‘அம்மா! எந்தக் காரியத்தையும் முடிக்கும் திறமைசாலியான உன் பிள்ளையிடம், உன் குறையைச்சொல்லத் தயக்கம் ஏன்? சொல்லம்மா!’’ என்றார்.

அஞ்சனையும் அதுவரை நடந்தவைகளை எல்லாம் ஆஞ்சநேயரிடம் சொல்லி, ‘‘அந்தச் சகுந்தனுக்கு நான் அபயம் கொடுத்து விட்டேன். அவனை நீ தான் காப்பாற்ற வேண்டும்!’’ என்றார்.அதைக்கேட்டதும் ஆஞ்சநேயரின் உடம்பு நடுங்கியது; கோபம் எல்லை கடந்து போனது; என்ன செய்வதென்று தெரியாமல் கைகளால் தரையில் ஓங்கியடித்தார்; எழுந்தார்; விழுந்தார்; விம்மினார்; உடம்பு முழுதும் வியர்வை வழிந்தது; எல்லாம் நாரதர் செயலாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த ஆஞ்ச நேயர் கோபத்தால் பற்களைக் கடித்து, நாரதரைப் பார்த்தார்.

(அடுத்த இதழில்….)

பி.என்.பரசுராமன்

The post சகுந்தன் appeared first on Dinakaran.

Tags : Kashi ,Atatalatha Sakunthan ,Sakunthan ,
× RELATED குற்றத்திற்குத் தண்டனை வழங்கிய அம்பை எருத்தாளுடையார்!