×

பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சிதான் என் தொழில்!

நன்றி குங்குமம் தோழி

பவித்ரா பாலாஜி

பூமிக்கு பெரும் கேட்டை விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து, புவியையும், இயற்கையையும், சூழலியலைக் காக்கும் விதமாய் சென்னை, கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வருகிற HLR PET ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் M.Tech பட்டதாரியான, இளம் பெண் தொழில்முனைவோர் பவித்ரா பாலாஜியை சந்தித்தபோது…

‘‘நான் பி.இ. சிவில் இஞ்சினியரிங் படித்து எம்.இ.ஸ்டக்சுரல் இஞ்சினியரிங் முடித்திருக்கிறேன். ஒரு பொருளை எப்படி ரீசைக்கிளிங் செய்வது. அதை மீண்டும் எப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பதே கல்லூரியில் என் புராஜெக்டாக இருந்தது. அதாவது, சஸ்டயினபிள் மேனேஜ்மென்ட் குறித்த புராஜெக்ட் இது. உலகம் வெப்பமயமாதலில் இருந்து மண்ணைக் காப்பாற்றும் சிறு முயற்சியாக, பிளாஸ்டிக் கழிவுகளை எந்த அளவு மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம் என்பதை, Zero carben challenge என்கிற தலைப்பில் கல்லூரியில் சமர்ப்பித்திருந்தேன்.

எனது புராஜெக்ட்தான் முதலாவதாய் தேர்வானது. இதை அடிப்படையாக வைத்தே, சஸ்டயினபிள் துறைக்குள் நுழைந்து, பிளாஸ்டிக் மறுசுழற்சியினை எனக்கான தொழிலாக மாற்றினேன்’’ எனப் புன்னகைத்தவர் மேலே பேச ஆரம்பித்தார்.

‘‘நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் தொழில்முனைவோருக்கான நேர்காணல் ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்று, தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கையுடன், அரசின் உதவி கேட்டு நுழைந்தபோது, அங்கு வரிசையில் 100 பேர் எனக்கு முன்னால் இருந்தார்கள். என் புராஜெக்ட் கண்டிப்பாய் பேசும் என்கிற எண்ணத்தில், நம்பிக்கை இழக்காமல் காத்திருந்தேன். நினைத்தது போலவே, திட்டத்தை நான் எப்படி செயல்படுத்தப் போகிறேன், லாபம் இதில் எப்படி கிடைக்கும். இதன் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் போன்ற தகவல்களை நேர்காணலில் என்னிடம் கேட்டார்கள். என் திட்ட அறிக்கையையும், தெளிவான பதிலையும் இரண்டு அரசுகளும் அங்கீகரித்தன.

தொழில் தொடங்குவதற்கான கடன் தொகை மற்றும் மானியங்களை வழங்கியதுடன், இளம் பெண் தொழில்முனைவோராக என் முயற்சியை ஊக்கப்படுத்தியும் வருகின்றனர்.
தற்போது என்னிடத்தில் 20 பேர் இரண்டு ஷிஃப்ட்டுகளில் நிரந்தரத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். இதில் 16 பேர் இலங்கை அகதிகள் முகாமில் இருந்து வந்து வேலை செய்கிற பெண்கள். இது தவிர்த்து தினக்கூலிகளாகவும் சிலர் மறுசுழற்சி பணியில் பணி செய்கின்றனர்’’ என்றவர், நிறுவனத்தின் செயல்பாடு குறித்தும் விளக்க ஆரம்பித்தார்.

‘‘2020ம் ஆண்டு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட என்னுடைய இந்த நிறுவனம், நகரெங்கும் சேகரமாகும் பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை வெப்பப்படுத்துதல் மூலம், உயர்தர மறுசுழற்சி முறையில் துகள்களாக மாற்றி(flakes), அவற்றை அரசு விதிகளுக்குட்பட்டு மறுசுழற்சி செய்து, மீண்டும் பாட்டில்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கும், பாலிஸ்டர் உடை தயாரிப்புக்கான நூல்களைத் தயாரிக்கும் ஆலைகளுக்கும் மூலப்பொருளாக அனுப்பி வைக்கிறது.

தொழில் தொடங்கிய இந்த ஒரு வருடத்தில், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் சேகரித்த சுமார் 1 கோடி பெட் பாட்டில்களை நாங்கள் ரீசைக்கிளிங் செய்து எங்களின் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறோம். இதற்கான நிகழ்ச்சி ஒன்றும் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா என்னைப் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். நம்மால் வீசியெறியப்படும் பெட் பாட்டில்களை சேகரிப்பவர்களிடம் இருந்து கிலோ ஒன்றுக்கு 27 ரூபாய் விலை நிர்ணயம் செய்து வாங்குகிறோம். அதுவே பிளெய்ன் பாட்டில் என்றால் கிலோ 32 வரை எடுத்துக்கொள்கிறோம்.

பாட்டிலில் உள்ள மூடி மற்றும் ஸ்டிக்கர்களை நீக்கிய பிறகு, பாய்லரில் அவற்றைப் போட்டு சுத்தப்படுத்தி தனியாகப் பிரித்து, வெப்பமூட்டல் மூலம் தூளாக்கப்படும். இந்த பிளாஸ்டிக் துகள்கள் பிளேக்ஸ் எனப்படும். இது கிலோ 60 ரூபாய் வரை விலை போகிறது.எங்களிடம் பிளாஸ்டிக் துகள்களை வாங்கிச் செல்லும் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், அவற்றை பாலிஸ்டர் நூல்களாக மாற்றுகின்றனர். நாம் உடுத்துவது காட்டன் உடையே என்றாலும், 10 முதல் 20 சதவிகிதம் பாலிஸ்டர் நூல் இதில் கட்டாயம் கலந்திருக்கும். அதுவே பாலிஸ்டர் உடையெனில் 62.5 சதவிகிதம் பிளாஸ்டிக் நூல்தான். ஒருசில நிறுவனங்கள் பிளாஸ்டிக் துகள்களை மீண்டும் பெட் பாட்டிலாய் மறுசுழற்சி செய்வதற்கும் வாங்கிச் செல்கின்றனர்.

பொதுமக்களின் கைகளில் இருக்கும் பெட் பாட்டில்கள் குப்பைக்குச் செல்லாமல் தடுக்கும் முயற்சியாக, கைபேசி செயலி ஒன்றையும் உருவாக்கி செயல்பாட்டில் வைத்திருக்கிறோம். அதாவது, பெட் பாட்டில்களை அதற்கென இருக்கிற வெண்டிங் மெஷின்களில் போட்டுவிட்டால் உங்கள் மொபைல் ஆப்பில் உங்களின் மதிப்பீடு(points) ஒவ்வொன்றாய் சேர ஆரம்பிக்கும். ஒரு கிராம் தங்கத்திற்கான எண்ணிக்கை சேர்ந்ததும், உங்கள் வீடு தேடி தங்க நாணயம் வரும்’’ எனப் புன்னகைத்தவர், ‘‘வெண்டிங் மெஷினில் போடப்பட்ட பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு, எங்களின் ரீசைக்கிளிங் யூனிட்டை நேரடியாக
வந்தடைகிறது’’ என்கிறார் வெற்றிப் புன்னகையை அழுத்தமாக உதிர்த்து.

பொதுமக்கள் பெட் பாட்டில்களை கண்ட இடத்திலும் தூக்கி எறியாமல் வெண்டிங் மெஷினில் போடப் பழக்கப்படுத்தும் சிறு முயற்சிதான் இது’’ என்றவாறு நம்மிடம் இருந்து இளம் தொழில்முனைவோரான பவித்ரா விடைபெற்றார்.

நெகிழியில் அரசின் கவனம் தேவை!

‘‘இது ஒரு போலித் தீர்வு. இதை டவுன் சைக்கிள் மறுசுழற்சி அல்லது குறை சுழற்சி என்றும் சொல்லலாம். ஒரு பிளாஸ்டிக்கை உருக்கி டெக்ஸ்டைல் நிறுவனம் பயன்படுத்தினாலும், அதன் மறுசுழற்சியிலும் பல்வேறு கெமிக்கல்ஸ் கலந்தே இருக்கும். இவை உடையோடு சேர்ந்து நமது உடலில் தினம் தினம் உறவாடிக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக மைக்ரோ பிளாஸ்டிக் போன்ற விஷயங்கள் தண்ணீரில் கலந்து பூமியில் சங்கமிக்கும் அபாயம் நிறைந்திருக்கிறது.

துணியாக மாற்றப்பட்ட பிளாஸ்டிக் மறுபடியும் ரீசைக்கிள் செய்ய முடியாமல் இறுதியில் குப்பையில்தான் சேரும். நேரடியாக பாட்டில் குப்பையில் போவதற்குப் பதிலாக உடையாக மாற்றி அதனைத் தூக்கி எறிகிறோம்.நெகிழியை உற்பத்தி செய்கிற பெரும் நிறுவனங்கள் அதனை திரும்பப் பெறும் முயற்சியையும் கையிலெடுக்க வேண்டும். தனி மனிதப் பொறுப்பில் இருந்து நிறுவனத்திற்கான பொறுப்பாக அரசு இதை மாற்ற வேண்டும்.’’

– ஜியோ டாமின்

(பூவுலகின் நண்பர்கள்)

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: எஸ்.நாகராஜ்

The post பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சிதான் என் தொழில்! appeared first on Dinakaran.

Tags : Bavithra Balaji ,HLR PET ,Kummidipundi, Chennai, Chennai ,earth ,Dinakaran ,
× RELATED குளிர்கால சரும பராமரிப்பு!