ஊட்டி : தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் ஊட்டி ஏரியின் சூழலியல் காப்பாற்றும் வகையில், ரூ.7.51 கோடி மதிப்பீட்டில் ஏரியின் முகப்பு பகுதியில் உருவான மணி திட்டுகளை டிரேட்ஜிங் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தில் தூர் வாரும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மத்தியில் ஊட்டி ஏரி அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கிய ஏரியாக விளங்கி வந்த ஏாியில் படகு சவாரியும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் காலபோக்கில் ஊட்டி நகரில் ஒடும் கழிவு நீர் அனைத்தும் ஏரியில் கலந்தது.
இந்த கால்வாய் நகரின் மையப்பகுதியில் செல்கிறது. கால்வாயின் இருபுறமும் உள்ள ஓட்டல்கள், குடியிருப்புகள், லாட்ஜ்கள் உள்ளன. இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளுடன் கால்வாயில் திறந்து விடப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் மண் மற்றும் வண்டல் படிமங்கள் வெள்ளநீருடன் சேர்ந்து ஏரியை வந்தடைகிறது. 1992ம் ஆண்டு 0.989 மில்லியன் கன மீட்டராக இருந்த ஏரியின் கொள்ளளவு தற்போது 0.691 மில்லியன் கன மீட்டராக குறைந்துள்ளது.
ஊட்டி ஏரி தூர் வாரப்படாத காரணத்தாலும் ஒவ்வொரு பருவமழை காலங்களில் வண்டல் அதிகளவு சேர்வதாலும் வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் கழிவுநீர் கலப்பால் ஏாி மாசடைகிறது. பழமை வாய்ந்த ஊட்டி ஏரியை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு துவக்கத்தில் பணிகள் துவங்கின.
முதற்கட்டமாக கோடப்பமந்து கால்வாயில் கோத்தகிரி சாலையில் இருந்து உழவர் சந்தை பகுதி, ஏடிசி மத்திய பஸ் நிலைய பகுதிகளில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே ஏரியை தூய்மைப்படுத்தும் வகையில், சென்னை அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி அதிகாரிகள், சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த ஜூலை மாதம் ஊட்டி ஏரி மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் மற்றும் நீர் நிறம் மாறுவதற்கான காரணம், ஏரிக்குள் கழிவுகள் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த திட்ட மதிப்பீடு செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஏரியின் பரப்பளவு, ஆழம், மழை காலங்களில் நீர் எந்த அளவிற்கு உயரும் என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு திட்டம் வகுக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் ஏரி சூழலியலை காக்க நவீன தொழில் நுட்பத்தில் டிரேட்ஜிங் முறையில் தூர் வாரும் பணிகள் ரூ.7.51 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் தூர்வாறும் பணிகளை மாவட்ட பொறுப்பு அமைச்சரான, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்.
இதற்கிடையே தூர் வாரும் பணிகளுக்காக இயந்திரங்கள், ஆய்வு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டிரேட்ஜிங் தொழில்நுட்பத்தில் தூர் வாறுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் இப்பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்த தூர் வாருதல் திட்டம் மூலமாக முதல் கட்டமாக 1 லட்சத்து 16 ஆயிரத்து 700 கன மீட்டர் அளவிற்கு தூர் வாரப்படுகிறது. தூர் வாரப்படும் மண்ணானது ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குப்பை மறு சுழற்சி கிடங்கு பகுதியில் கொட்டப்படும். இதற்கு நகராட்சி அனுமதியும் பெறப்பட்டுள்ளது’’ என்றனர்.
The post நவீன தொழில்நுட்பத்தில் ஊட்டி ஏரி சூழலியல் காப்பாற்ற ரூ.7.51 கோடியில் தூர் வாரும் பணி appeared first on Dinakaran.