அகோரமூர்த்தி அருளாட்சி புரியும் ஒரே திருத்தலம்

திருவெண்காடு

சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில், மயிலாடுதுறை-மங்கைமடம் பாதையில் அமைந்துள்ளது திருவெண்காடு என்னும் சிவத்தலம். ஆதி சிதம்பரம், சுவேதனம், சுவேதாரண்யம் என்று திருத்தலத்துக்குப் பல பெயர்களுண்டு. இறைவன் சுவேதாரணிஸ்வரர். இறைவி பிரம்மவித்தியா நாயகி. தீர்த்தம், முக்குளம் எனப் போற்றப்படும் சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்கள் கொண்ட திருத்தலம்.

திருக்கோயிலின் வெளிச்சுற்றில் அக்கினி மூலையில் அக்கினி தீர்த்தமும், தெற்குச் சுற்றில் சூரிய தீர்த்தமும், வடக்குச் சுற்றில் தேவி கோயில் தீர்த்தமும் உள்ளது. இதை சந்திர தீர்த்தம் என்பர். இத்தீர்த்தங்களின் மகிமை எண்ணற்றவை. எண்ணியதை எண்ணி நீராடி அவற்றைத் தப்பாது பெறலாம். திருப்பெண்ணா கடத்து அச்சுதக்களப்பாளர் தம் ஆசிரியரான அருணந்தி சிவாச்சாரியாரின் அறிவுரைப்படி இங்கு வந்து முக்குளத்தில் விதிப்படி மூழ்கி நீராடி, ‘சுவேதவனப் பெருமான்’ என்னும் பெயர் கொண்ட ‘மெய் கண்ட தேவனைப்’ பெற்றனர் என்பது வரலாற்று உண்மையாகும். இத்தீர்த்த மகிமையை திருஞான சம்பந்தர் பெருமான்;

`‘பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ள நினை
வாயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டாவென்றும்
வேயனதோ ளுமைபங்கள் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே!’’
– என்று தேவாரப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இத்திருக்கோயிலில் இறைவன் சந்ரதிக்கு நேர் எதிரில் இறைவி சந்நதி அமைந்துள்ளது. இத்திருக்காட்சி வேறு எங்கும் காண முடியாது. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் தீக்கனா கண்ட கண்ணகி, தன் தோழியாகிய தேவந்தியிடம் செய்தியைச் சொல்ல, அவளும், சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகியவற்றில் நீராடி காமவேள் கோட்டத்தில் வழிபாடு செய்யின் இப்பிறப்பில் கணவரோடு பிரிவின்றி வாழ்ந்து மறு பிறப்பினும் அவருடனிருந்து இன்பம் துய்க்கலாம். ஆதலால் யாமும் அவ்வாறே செய்வோம் என்றாள். இங்கே கூறிய சோமகுண்டம், சூரிய குண்டம் முறையே திருவெண்காட்டிலுள்ள சோமதீர்த்தமும் சூரிய தீர்த்தமும் ஆகும்’’ என்று டாக்டர் உ.வே. சாமிநாதய்யரவர்கள் கூறுகிறார்.

பிறக்க ஆரூர்; தரிசிக்கத்தில்லை; நினைக்க அண்ணாமலை; இறக்க காசி என்பர். இதை அனைத்தும் ஒருங்கே ஓரிடத்தே தருவது திருவெண்காடு என்பர். அதனால் இத்தலம் முத்தி வெண்காடு, முத்திவாயில், முத்திநகர் எனவும் பெயர் பெற்றது.சைவக் குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற இத்தலத்தின் பெருமை சொல்லில் அடங்காதது. எங்கும் நிறைந்த மகா சக்தி அன்னை பிரம்மவித்தியா நாயகி, ஞானப்பால் அருந்திய சிவ நெறிச்சீலரான திருஞானசம்பந்தர் இத்தலமேவினார். ஊரின் வட எல்லையில் நின்ற போது, ‘ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும்’ தோன்றியதால் தமது கால்கள் அத்தலத்தை மிதித்திட அஞ்சினார்.

இருப்பினும் ஐயனை தரிசித்திடவும், அன்னையைக் கண்டு மகிழ்ந்திடவும் கருதி, அன்னையை நினைத்து ‘அம்மா’ என்று அழைக்க, அதைக்கேட்ட பிரம்ம வித்தியாராயகி, திருஞான சம்பந்தர் முன்தோன்றி குழந்தையைத் தூக்கி தனது இடுப்பில் வைத்துக் கொண்டு கோயிலை அடைகிறாள். ‘சர்வம் சிவமயம்’ என்று இந்த ஞானக்குழந்தை இத்தலத்தில் கண்ட காட்சியே இத்தலத்தின் மகிமையைப் பன் மடங்காக்குகிறது.

தில்லையில் ஆடுவதற்கு முன்பு ஆடல்வல்லான் திருவெண்காட்டில் ஆடியதால் இத்தலத்தை ‘ஆதிசிதம்பரம்’ என்றும், ஊழிக்காலத்தில் உலகம் உய்ய சிவபிரான் ஆடத்துவங்கிய ஞானத்தாண்டவம் மறு ஊழி வரை தொடர்ந்ததால் ‘பேரரங்கம்’ என்றும் இத்தலம் பெயர் பெற்றது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சீர்காழி வட்டத்திலுள்ள இந்த சிவஸ்தலத்திற்குச் செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

நான்கு அகன்ற வீதிகளுக்கு நடுவே மடவிளாகங்கள் சுற்றிலும் அமையப்பெற்ற இப்பெருங்கோயில் கிழக்கு நோக்கியிருந்தாலும் மேற்கு வாசல் ஒன்றும் இருக்கின்றது. கண்ணுக்குத் தெரியும் தொலைவு வரையில் ஆலயத்தின் வடிவமைப்புகளே இவ்வூரின் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.தலங்களுள் நடுநாயகமாகி அதனால் தலநாயகம் என்ற பெயர் பெற்ற இவ்வூரில் தான் ‘சிவஞான போதம் என்னும் ஒப்பற்ற நூல் அருளிச் செய்யப் பெற்றது. இதனால் சைவர்களின் போற்றுதலுக்குரிய புண்ணிய தலமாக திருவெண்காடு விளங்குகிறது. இத்தல இறைவன் சுவேதாரண்யேஸ்வரர், இறைவி பிரம்ம வித்தியாநாயகி, முக்குளம் எனப்படும் சூரிய சந்தி, அக்னி தீர்த்தங்கள் கொண்டது.

பிறக்க ஆரூர் தரிசிக்க தில்லை. நினைக்க அண்ணாமலை; இறக்கக் காசி என்பர். இவை அனைத்தும் ஒருங்கே ஓரிடத்தே தருவது திருவெண்காடே! அதனால் முக்தி வெண்காடு; முக்தி வாயில்; முத்தி நகர் எனப்பெயர் பெற்றது.கணபதி என்றவுடன் கணபதி வழிபாடான காணாபத்திய சாஸ்திரங்களின் நினைவு வருகிறது. மயூரேசத்தில் மறைந்து போன இச்சாஸ்திர ரகசியங்களை க்ஷேத்ர பாலபுரத்தைச் சேர்ந்த சாம்பசிவ சாஸ்திரிகளுக்கு மீண்டும் சிவபெருமானின் அம்சமான அகோர மூர்த்திகளே அருளிச் செய்தார். காணாபத்திய சாஸ்திரங்களை அருட்பாலித்த ‘அகோர மூர்த்தி’ என்ற திருநாமம் கொண்ட ஈசனின் அவதார மகிமைகள் வேறென்ன?

சிவபெருமான் அறுபத்து நான்கு மூர்த்தி பேதங்களுள் ஒன்றானது  அகோர மூர்த்தி. நாற்பத்து மூன்றாவதான இம்மூர்த்தியைத் திருவெண்காடு திருத்தலத்தில் மட்டுமே காண முடியும். இத்தல உட்பிரகாரத்தில் அகோர வீரபத்திர மூர்த்தி கையில் திரிசூலத்துடன் தென் முகம் நோக்கிக் காட்சி தருகின்றார். இவரது திருமேனியில் பதினான்கு நாகங்கள் ஆபரணமாக விளங்குகின்றன.

இவர் தன் வலது கால் கட்டை விரல் மற்றும் இரண்டாவது விரலைத் தரையில் ஊன்றி, திருப்பாதம் தூக்கிய நிலையில் மூவிலை சூலம் ஏந்தி முக்கண்ணராய், எண்தோள் ஈசராக எண்கரம் கொடு காட்சியளிக்கிறார். இவரின் திருவடியில் மருத்துவாசூரன் சரணடைந்து கிடக்கிறான். இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு திருத்தாண்டகத்தில் அப்பர் போற்றிப் பரவுகிறார்.
‘உத்தர காரணாகமம்’ இவரை அகோர ஸ்திர மூர்த்தி’ என்று குறிப்பிடுகிறது. தல புராணப்பாடல் ஒன்றில் அகோர மூர்த்தியின் திருவுருவம் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

‘‘கரு நிறமு மணிமாலை புனையழகும்
வளையெயிறும் கவினைச் செய்ய
எரிசிகையும் நுதல் விழியும் நடைக்கோல
இணையடியும் இலக எட்டுக்
கர நிலவ மணிபலகை வெண்டலை வாள்
கடிதுடியேர் சூல மேற்று
வெருவ மருத் துவனை யடர் அகோர சிவன்
துணைப்பதச் சீர் விளம்புவாமே!’’

அற்புதமான கரிய திருமேனி கொண்ட இவர், வேறெங்கும் காணமுடியாத கவினுரு வனப்புக் கொண்டவர். இவர் இடது காலை முன்வைத்து, வலது கால் கட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கின்ற கோலத்தில் இருக்கின்ற இவரைக் காணக் கண் கோடி வேண்டும். அவ்வளவு அழகு. எட்டுக் கைகள் கொண்டவராய் ஏழு ஆயுதங்களான வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி வீரராகக் காட்சியளிக்கிறார். சிவந்த ஆடைகள் அணிந்துள்ள இவர், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன், நெற்றிக் கண் நெருப்பைக்கக்க, கோரப் பற்களுடன் பதினான்கு பாம்புகளை திருமேனியில் பூண்டு, வரிசையாக மணிமாலை திருமார்பை அலங்கரிக்க கம்பீரமாகக் காட்சியளிக்கின்றார். இவரின் அவதாரக் காரணம் என்ன?

மருத்துவன் என்ற கொடிய அசுரன் பிரம்மனிடம் பெற்ற வரத்தின் ஆணவத்தால் தேவர்களுக்குக் கடும் துன்பம் விளை வித்துக் கொண்டிருந்தான். இதனால் சிவபெருமான் தேவர்களை திருவெண்காடு சென்று அங்கு வேறு உருவில் வாழச் சொன்னார். அசுரன் மருத்துவன் விடுவதாக இல்லை. திருவெண்காட்டிற்கும் துரத்திக் கொண்டு வந்துவிட்டான். திருவெண்காட்டீசர் தம்மை அடைக்கலம் அடைந்தவர்களைக் காத்திடும் எண்ணத்தில், இடப தேவரை அசுரனோடு போரிட ஏவினார்.

இடப தேவரிடம் அசுரன் தோல்வியுற்று, பின்பு சிவபிரானை நோக்கி கடுந்தவமியற்றினான். தவப்பயனாக சிவபிரானிடமிருந்து சூலாயுதத்தைப் பெற்று இடபதேவரை பலத்த காயப்படுத்தினான். திருவெண்காட்டு இறைவனிடம் வந்து உபாதை தாங்காமல் முறையிட்டார் இடபதேவர். மிகுந்த சினம் கொண்ட, சிவன் தனது ஐந்து முகங்களில் ஒன்றாகிய அகோர முகத்தினின்று தீப்பொறிகளை ஏவினார். கோபத்தின் பிரதி பலிப்பான இத்தீப்பொறிகளினின்று அகோர மூர்த்தி மாசி மாதம் கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு பன்னிரண்டு மணிக்குத் தோன்றினார்.

இதனையே இத்திருத்தலத்தில் ‘‘ஐந்தாம் திருவிழா’’வாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு பன்னிரண்டு மணிக்கு ‘‘அகோர மூர்த்தி பூஜை’’ நடைபெறுகிறது என்றாலும், ‘‘கார்த்திகை மாதம்’’ வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பூஜை மிக மிக விசேஷமாக நடைபெறுகிறது. அன்று இரவு அகோர மூர்த்தியை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள கூத்தப்பெருமான் திருச்சந்நிதி போலவே இங்கு அகோர மூர்த்தியின் கருவறை அமைந்துள்ளது. மன மகிழ்வுடன் கண்டுகளிக்கலாம்.

மேலும், மிகத் தொன்மையான படைப்புச் சிற்பமாக இங்கு தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவரை ‘மேதா வித்யா தட்சிணா மூர்த்தி என்பர். பிற இடங்களில் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். இங்கு அவர் பிரம்மனுக்கு உபதேசம் செய்கிறார். கல்லால மர நிழலில் யோக நிலையில் அமைந்துள்ளார். மரக்கிளையில் இவருடைய தோற்பையும் உருத்திராக்க மாலையும் மாட்டப்பெற்றுள்ளன.

புராணப்படி இவரே இங்கு வீற்றிருந்த சிவபெருமான் ஆவார். இவரிடமிருந்தே ‘‘அகோர மூர்த்தி’’ தோன்றினார். இன்றும் ஐந்தாம் திருவிழாவன்று கார்த்திகை ஞாயிற்றுக்கிழமையில் அகோர மூர்த்தி இவரிடமிருந்தே வேல் வாங்குகிறார். அகோர மூர்த்தி அருளாட்சி புரியும் ஒரே திருத்தலம் திருவெண்காடு. அவரை கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசித்து நலம் பெறுவோம்!

டி.எம்.ரத்தினவேல்

The post அகோரமூர்த்தி அருளாட்சி புரியும் ஒரே திருத்தலம் appeared first on Dinakaran.

Related Stories: