×

மூதாட்டியின் 110வது பிறந்த நாளை திருவிழாபோல் கொண்டாடிய உறவினர்கள்

பண்ருட்டி, டிச. 10: பண்ருட்டி அருகே 4 தலைமுறையினருடன் ேசர்ந்து கறி விருந்து வைத்து மூதாட்டியின் 110வது பிறந்தநாளை திருவிழாபோல் உறவினர்கள் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்தின்- ராசாம்பாள். இவர்களுக்கு 14 பிள்ளைகள் இருந்த நிலையில் 7 பேர் இறந்துவிட்டனர். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு சந்திரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் கடைசி மகனான ஞானசேகரன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் பராமரிப்பில் ராசாம்பாள் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ராசாம்பாளுக்கு 110வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்.

இதற்காக 7 பிள்ளைகள், மருமகள்கள், பேர குழந்தைகள், கொள்ளு பேரப்பிள்ளைகள், அவரது உறவினர்கள் சூழ ஊரையே அழைத்து கறி விருந்து போட்டு திருவிழாபோல ராசாம்பாள் பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடினர். இந்த நிகழ்வு அப்பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில் உறவினர்கள் அவரவர் வாழ்க்கையை பார்த்துக்கொண்டு தெறித்து ஓடிக்கொண்டு இருக்கும் நிலை உள்ளது. மேலும் பெற்றோர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டு செல்லும் பிள்ளைகளும் ஒருபுறம் உள்ளனர். இதற்கு மத்தியில் 110 வயது வரை தனது தாயை சீராட்டி பராமரித்து வந்து 110 வது பிறந்தநாளை கறி விருந்துடன் திருவிழா போல கொண்டாடிய ஞானசேகரன் மற்றும் அவரது உறவினர்களின் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றது.

இதுகுறித்து ராசாம்பாளின் உறவினர்கள் கூறும்போது, ‘ஆயிரம் ஆலயங்களுக்கு சென்று கடவுளை விழுந்து விழுந்து வணங்கினாலும் கிடைக்காத புண்ணியம் நடமாடும் தெய்வமாக திகழும் நம்மைப் பெற்ற தாய், தந்தையினரை நல்ல முறையில் பார்த்துக்கொள்வது தான். இன்றைய காலகட்டத்தில் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்கள் அதிகரித்து வருவது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதற்கு எடுத்துக்காட்டாக பொறாமை, பொச்சரிப்பு இன்றி அனைத்து உறவுகளும் ஒன்றாக கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகளை பெறலாம்’ என கூறினர். மூதாட்டி ராசாம்பாள் பிறந்தநாள் விழாவில் அவரது பிள்ளைகள் 7 பேர், பேரன்கள் 30 பேர், கொள்ளுபேரன் 53 பேர் என மொத்தம் 80 பேர் கலந்துகொண்டனர். இதில் 5 கொள்ளு பேரன்கள் வெளிநாட்டில் வேலை செய்வதால் அவர்கள் வீடியோ கால் மூலம் பாட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post மூதாட்டியின் 110வது பிறந்த நாளை திருவிழாபோல் கொண்டாடிய உறவினர்கள் appeared first on Dinakaran.

Tags : Panruti ,Chandin- ,Rasambal ,Cuddalore district ,Festival ,
× RELATED 4 தலைமுறை வாரிசுகளுடன் 110வது பிறந்த நாள் விழா கொண்டாடிய மூதாட்டி