திருவண்ணாமலை, டிச. 10: இன்ஸ்டாகிராமில் பழக்கிய சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறி திருவண்ணாமலையை சேர்ந்த காதலன் உட்பட 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் 15வயது சிறுமி. இவரது பெற்றோர் இல்லாததால் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருவண்ணாமலை அடுத்த நாவக்கரை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர். நாளடைவில் இருவரும் காதலித்து வந்தார்களாம்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 20ம் தேதி இன்ஸ்டாகிராம் காதலன், சிறுமியை திருவண்ணாமலைக்கு வரவழைத்துள்ளார். அதனை நம்பி வந்த சிறுமியை தனது உறவினர் வீட்டில் 3 நாட்கள் தங்க வைத்துள்ளார். அப்போது காதலன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டில் இருந்த சிறுமி காணாமல் போனதை கண்டு அவரது பாட்டி அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், 4 நாட்கள் கழித்து சிறுமி மீண்டும் வீடு திரும்பினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதித்துள்ளது. சிறுமியிடம் கேட்டபோது, இன்ஸ்டா காதலனுடன் திருவண்ணாமலைக்கு சென்றதும், அங்கு காதலனும், அவரது நண்பர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தாராம். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான வழக்கை, போக்சோ வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் நேற்று அதிகாலை திருவண்ணாமலை மாவட்டம் நாவக்கரைக்கு சென்று இன்ஸ்டாகிராம் காதலன் உட்பட 8 பேரை பிடித்து விசாரணைக்காக நாமக்கல் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post 15வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை காதலன் உட்பட 8 பேரிடம் விசாரணை தி.மலையில் இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம் appeared first on Dinakaran.