அமெரிக்க தொழில் அதிபருடன் காங்கிரசை தொடர்புபடுத்தி பேச்சு மக்களவையை முடக்கிய எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் பா.ஜ அமளி

புதுடெல்லி: அமெரிக்க தொழில் அதிபருடன் காங்கிரஸ் கட்சியை தொடர்புபடுத்தி பேசிய விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகளும், மாநிலங்களவையில் பா.ஜ அமளியால் இரு அவைகளும் முடங்கின. அமெரிக்க நீதிமன்றத்தில் தொழிலதிபர் அதானி மீதான குற்றப்பத்திரிகை மற்றும் சம்பல் வன்முறை போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தால் நவம்பர் 25ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரம் முற்றிலும் முடங்கியது.

இதையடுத்து இருதரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் கடந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே அவை நடந்தது. கடந்த வாரம் வியாழனன்று, பா.ஜ உறுப்பினர் நிஷிகாந்த் துபே பேசுகையில் பிரதமர் மோடியின் கீழ் இந்தியாவின் வெற்றிக் கதையைத் தடம் புரட்ட ஒரு சர்வதேச சதி நடந்து வருகிறது. இதில் அமெரிக்க தொழில் அதபிர் ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி பிரான்ஸ் நாட்டு ஊடகத்தில் வெளியான செய்தி அடிப்படையில் பேசினார். இதனால் அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டு அவை முடங்கின.

நேற்று காலை 11 மணிக்கு அவை கூடியபோது, ​​எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரையும், அதை தொடர்ந்து மதியம் 2, மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமெரிக்க தொழில் அதிபர் ஜார்ஜ் சோரசுடன் தொடர்புபடுத்தி பேசிய பாஜ எம்பி நிஷிகாந்த் துபேக்கு எதிராக சிறப்புரிமைத் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்ததாக காங்கிரஸ் எம்பிக்கள் தெரிவித்தனர்.

மாநிலங்களவை: மாநிலங்களவையில் இதே பிரச்னையை பா.ஜ எழுப்பியது. அவை முன்னவர் ஜே.பி. நட்டா பேசுகையில்,’நாட்டைச் சீர்குலைக்க கோடீஸ்வர முதலீட்டாளர் ஜார்ஜ் சோரசுடன் காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டுச் சேர்ந்த பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும். ஆசியா-பசிபிக் ஜனநாயகத் தலைவர்களின் மன்றத்திற்கும் (எப்டிஎல்-ஏபி) ஜார்ஜ் சோரசுக்கும் இடையே உள்ள தொடர்பு கவலைக்குரியது. அதன் இணைத் தலைவர் இந்த அவையில் உறுப்பினராக உள்ளார். எப்டிஎல்-ஏபி அமைப்பு, காஷ்மீரை ஒரு தனி பகுதியாக பார்க்கிறது. இந்த அமைப்பில் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிதி உதவியைப் பெறுகிறது.

இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், இந்த விவகாரம் குறித்து சபையில் விவாதிக்க வேண்டும்’ என்று கோரினார். இதற்கு பா.ஜ மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களும் ஆதரவு கொடுத்தனர். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதானி விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே பா.ஜ இவ்வாறு செய்யப்படுவதாகக் கூறினர். இந்த அமளியால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. பாஜ எம்பி லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய், தேசிய பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக பேசியதால், காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் அவரது கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட அமளியில் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

* துணை ஜனாதிபதியை பதவி நீக்க நோட்டீஸ்?
மாநிலங்களவை தலைவராக உள்ள துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்வதற்கான நோட்டீசை வழங்க எதிர்க்கட்சி முகாம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவு குளிர்கால கூட்டத்தொடர் வரை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று 267 விதியின் கீழ் பா.ஜ உறுப்பினர்கள் 11 பேர் கொடுத்த நோட்டீசை நிராகரித்த பிறகும், அதில் உள்ள விஷயங்கள்குறித்து பேச ஜெகதீப் தன்கர் அனுமதித்ததால் எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. எனவே துணை ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அரசியலமைப்பின் பிரிவு 67(பி)ன் கீழ், மாநிலங்களவையில் கொண்டு வரும் தீர்மானத்தின் மூலம் துணை ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடதக்கது.

* விவாதம் நடத்தலாம்
ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில்,’ஜார்ஜ் சோரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய மாட்டோம். டிசம்பர் 13, 14ம் தேதிகளில் மக்களவையிலும், டிசம்பர் 16, 17ம் தேதிகளில் மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தலாம் என்றும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளோம். நாட்டுக்கு எதிரான அமைப்புகளுடன் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தொடர்பு இருக்கும்பட்சத்தில், இந்தப் பிரச்னையில் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

The post அமெரிக்க தொழில் அதிபருடன் காங்கிரசை தொடர்புபடுத்தி பேச்சு மக்களவையை முடக்கிய எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் பா.ஜ அமளி appeared first on Dinakaran.

Related Stories: