உறுப்பினர் நயினார் நாகேந்திரன்: இது சாதாரண விஷயம்.
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஒன்றிய அரசு மாநில அரசிடம் ஏற்கனவே விளக்கம் கேட்டது. அந்த சுரங்கம், 1.96 சதுர கி.மீ. பரப்பில் தான் அமைய இருக்கிறது. அன்றைக்கு மத்திய அரசு கடிதம் எழுதி கருத்து கேட்டபோதே மாநில அரசு, அந்த திட்டம் வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் தான் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன்: இந்த விவகாரம் தொடர்பாக 3-10-2023 அன்று நான் மத்திய கனிமவளத் துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில், சுரங்கம் அமைக்கும் உரிமத்தை மாநில அரசிடம் அளிக்க கேட்டுள்ளோம்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: ஒன்றிய அரசிடம் இருந்து கடிதம் வந்தபோதே, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். கனிமவள சட்டத்தில் அதற்கான திருத்தம் வந்தபோதே தமிழகம் அதை எதிர்த்தது. அப்போதும் எதிர்ப்பு தெரிவித்தது, இப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால், நீங்கள் அன்றைக்கே நிறுத்தி இருக்கலாம் என்று கூறுகிறீர்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய பிறகும் அந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்கிறீர்கள். அதாவது, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறீர்கள்.
நயினார் நாகேந்திரன்: 1.96 சதுர கி.மீ. இடத்துக்குத்தான் டெண்டர் விடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், உறுப்பினர் வேல்முருகன் இங்கே பேசும்போது, அதனால் புற்றுநோய் வரும் என்று தெரிவித்தார். அப்படி எல்லாம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் பாஜ செயல்படுத்தாது.
வேல்முருகன்: புற்றுநோய், இதயநோய் வர வாய்ப்புள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையம், உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கையில் கூறி உள்ளது.
நயினார் நாகேந்திரன்: டங்ஸ்டன் சுரங்கத்தை தமிழகம் ஏற்காதது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் பேசியுள்ளோம். நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அவை முன்வைக்கப்பட்டுள்ள இந்த தனித் தீர்மானத்தை பாஜ ஏற்றுக்கொள்கிறதா, எதிர்க்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
நயினார் நாகேந்திரன்: மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் பாஜ செயல்படுத்தாது.
சபாநாயகர் அப்பாவு: அப்படி என்றால், தனித் தீர்மானத்துக்கு பாஜ ஆதரவு என எடுத்துக்கொள்ளலாமா? இவ்வாறு விவாதம் நடந்து முடிந்தது.
The post மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் பாஜ செயல்படுத்தாது: நயினார் நாகேந்திரன் உறுதி appeared first on Dinakaran.