திமுக பிரமுகர் கொலை உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு: சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு: கள்ளத்துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டபடி ஓடியதால் நடவடிக்கை

சென்னை: திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோ கொலை உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த ஏ கேட்டகிரி ரவுடி அறிவழகனை ஓட்டேரியில் பிடிக்க முயன்ற போது, போலீசாரை நோக்கி கள்ளத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் தற்பாதுகாப்புக்காக அவரை சுட்டு பிடித்தார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற பிறகு ரவுடிகளின் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கையால் ஏ பிளஸ் மற்றும் ஏ கேட்டகிரி ரவுடிகள் பலர் சென்னையை விட்டு ஆந்திரா, கர்நாடகாவுக்கு தப்பி ஓடிவிட்டனர். இருந்தாலும், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்யும் வகையில் புதிதாக சென்னை பெருநகர காவல்துறையில் ‘ரவுடிகள் ஒழிப்பு பிரிவு’ என்று உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் தனிப்பிரிவு தொடங்கி கமிஷனர் அருண் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ரவுடிகள் ஒழிப்பு பிரிவின் தனிப்படையினர் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் முகாமிட்டு கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றதால் பிடியாணை வழங்கப்பட்டு தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரவுடிகளை வேட்டையாடி வருகின்றனர். அந்த வகையில், சென்னை ஓட்டேரியை சேர்ந்த ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 5வது தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் ஹரி(எ)அறிவழகன் (24). இவர் மீது 2013ம் ஆண்டு திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோவை கொலை செய்த வழக்கு, 2017ம் ஆண்டு வியாசர்பாடி பகுதியில் இடிமுரசு இளங்கோவின் தம்பி மகன் பழனியை கொலை செய்த வழக்கு, சோழவரத்தில் திவாகர் என்பவரை கொலை செய்த வழக்கு உள்பட 3 கொலை வழக்குகள் உள்ளது. இதுதவிர, சோழவரம், மீஞ்சூர் மற்றும் திருத்தணி காவல்நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதேநேரம் வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஏ கேட்டகிரி சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளார். இதில் சில வழக்குகளில் கடந்த 6 வருடங்களாக அறிவழகன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். எனவே அவரை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், வெங்கடேஷ்வரன், காவலர்கள் சலீம், ஆண்டனி ஆகியோர் ரவுடி அறிவழகனை செல்போன் சிக்னல் உள்ளிட்ட தகவலை வைத்து தேடினர். அப்போது ரவுடி அறிவழகன் ஆந்திராவில் பதுங்கி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து தனிப்படை ஒன்று ஆந்திரா சென்றனர். ஆனால் போலீசார் தன்னை தேடி ஆந்திரா வந்ததை நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட ரவுடி அறிவழகன் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தப்பி வந்தார். பின்னர் ரவுடி அறிவழகன் பதுங்கி உள்ள தகவல்களை தனிப்படையினர் சேகரித்தனர். அப்போது ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனி 2வது தெருவில் உள்ள பயன்பாட்டில் இல்லாத ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ரவுடி அறிவழகன் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பது தெரியந்தது. உடனே எஸ்ஐ பிரேம்குமார் தலைமையிலான தனிப்படையினர் அறிவழகன் பதுங்கியுள்ள கட்டிடத்தை நேற்று காலை 5.45 மணிக்கு சுற்றி வளைத்தனர்.

இதை பார்த்த ரவுடி அறிவழகன், அங்கிருந்து தப்பி செல்லும் வகையில் போலீசாரை நோக்கி கையில் வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓட முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத தனிப்படை போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ரவுடி அறிவழகன் கையில் துப்பாக்கி இருந்ததால், சினிமா காட்சிகள் போல் தனிப்படையினர் தற்பாதுகாப்புக்காக கையில் வைத்திருந்த துப்பாக்கிகளை வைத்து லாவகமாக ரவுடி அறிவழகனை பிடிக்க முயன்றனர்.

ஆனால் மீண்டும் ரவுடி போலீசாரை நோக்கி துப்பாக்கியை காட்டி, ‘அருகில் வந்தால் உங்களை சுட்டுவிடுவேன்…… ஒரு முறை தான் உங்களை நான் எச்சரித்தேன்….. இனி எச்சரிக்க மாட்டேன் சுட்டுவிடுவேன் என்று மிரட்டியபடி தப்பி ஓட முயன்றான். ஒரு கட்டத்தில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தனக்குரிய பாணியில் ரவுடி அறிவழகனை துப்பாக்கியால் வலது முழங்காலை நோக்கி சுட்டார். அதில் குண்டு பாய்ந்து வலி தாங்க முடியாமல் விழுந்த ரவுடி அறிவழகனிடம் இருந்த துப்பாக்கியை சக போலீசார் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து மடக்கி பிடித்தனர்.
பின்னர் காயமடைந்த ரவுடி அறிவழகனை தனிப்படை போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் ரவுடி அறிவழகன் காலில் பாய்ந்து இருந்த குண்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜா, செம்பியம் உதவி கமிஷனர் முகேஷ், ஜெயக்குமார், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சென்று துப்பாக்கி சூடு நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது ரவுடி அறிவழகன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் 6 கிலோ எடையுள்ள கஞ்சா, பட்டாக்கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கள்ளத்துப்பாக்கியில் வெடிக்காத ஒரு குண்டு மட்டும் இருந்தது.

ரவுடி அறிவழகன் பயன்படுத்திய கள்ளத்துப்பாக்கி பீகார் மாநிலத்தில் 9 எம்.எம்.பிஸ்டலை ரூ.37 ஆயிரத்திற்கு வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அறிவழகன் ஏற்கனவே போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி முத்து சரவணனின் எதிரணியை சேர்ந்த கதிர், சேது மற்றும் தொப்பை கணேசன் ஆகிய ரவுடிகளுடன் நேருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், ஏற்கனவே சோழவரத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட முத்துசரவணனின் கூட்டாளிகளான முருகேசன், சூழ்ச்சி சுரேஷ் ஆகியோரால் தனக்கு ஆபத்து உள்ளது என்பதை அறிந்து ரவுடி அறிவழகன் தனது பாதுகாப்புக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், துப்பாக்கி சூடு தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தடயவியல் துறை நிபுணர் பூவித்தா தலைமையிலான குழுவினர் ரவுடி அறிவழகன் பதுங்கி இருந்த பழைய கட்டிடத்தில் ஆய்வு செய்து கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். சென்னையில் கொலை உள்ளிட்ட 10க்கும் ேமற்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு ஆந்திராவில் 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ரவுடி அறிவழகனை துப்பாக்கியால் தனிப்படை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் ரவுடிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

* எஸ்.ஐ. பிரேம்குமாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு

எஸ்ஐ. பிரேம்குமார் கடந்த 2011ம் ஆண்டு பேட்ச் சேர்ந்தவர். விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர்கள் 12 பேரின் ஆப்பிள் செல்போன்களை திருடிய திருடனை உயர்நீதிமன்றம் அருகே வைத்து சாலையில் சண்டை போட்டு இவர் பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. கடந்த 2019ம் ஆண்டு மாதவரத்தில் வல்லரசு என்ற ரவுடியை இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார் என்கவுன்டர் செய்தபோது எஸ்ஐ பிரேம் குமார் அந்த குழுவில் இருந்தார். 2020ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அறிவழகனின் கூட்டாளி பிரபல ரவுடி தொப்பை கணேஷை கைது செய்தபோது அறிவழகன் தப்பிச்சென்று விட்டார். இதன்பின்னர் ஒரு துப்பாக்கி, 8 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ரவுடி அறிவழகனை என்கவுன்டர் செய்யாமல் சுட்டு பிடித்த எஸ்ஐ பிரேம்குமாருக்கு உயர் காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post திமுக பிரமுகர் கொலை உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு: சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு: கள்ளத்துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டபடி ஓடியதால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: