நன்றி குங்குமம் டாக்டர்
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
எலும்புத் தசைகளும் காயங்களும்!
‘‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’’
உடல் அழிந்து விட்டால், உயிரும் நீங்கி விடும். அதனால் உடம்பை பாதுகாக்கும் வழிகளை அறிந்து, உடம்பை காப்பாற்றி வளர்த்து, அதன் மூலம் உயிரையும் வளர்த்தேன் என்று திருமூலர் கூறுகிறார்.நமது உடல் ஒரு சதைப்பிண்டம் என்று பல சித்தர்கள் பாடியுள்ளனர்.மருத்துவ மொழியில் தசைப்பிண்டம் எனலாம். உடலின் மொத்த எடையில் 40% தசைகளே, 600க்கும் மேற்பட்ட தசைகள் ஒன்று கூடி ஒரு உடலுக்கு வடிவமைப்பைத் தருகிறது.எலும்புக்கூட்டிற்கு வெளியே உள்ள தசைகள்தான் உடல் இயக்கத்திற்கும், உடலமைப்பிற்கும் உறுதுணையாக உள்ளது.
நாம் கண்ணால் ஒரு பொருளை காண்பதற்கோ, வாசனையை நுகர்வதற்கோ, காதுகளால் ஒலியை கேட்பதற்கோ, சுவாசிப்பதற்கு, உட்கொள்ளும் உணவு ஜீரணிப்பதற்கு, ஜீரணித்த கழிவை வெளியேற்றுவதற்கு, உடலில் ரத்த ஓட்டத்தை சீர்படுத்த என எல்லாவற்றிற்கும் தசைகளின் அமைப்பு, அவற்றின் அசைவுகள் சீராக இருத்தல் வேண்டும்.தசைகளில் மூன்று வகைகள் இருந்தாலும் நாம் இந்தக் கட்டுரையில் எலும்பு தசைகளில் ஏற்படும் காயங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தசைகளின் அமைப்புக்கள், வகைகளைப்பற்றி அறிய வேண்டும் என்றால் இதைப்பற்றிய கட்டுரைகள் இணையதளங்களில் விரவிக்கிடக்கிறது.ஆங்கிலத்தில் Musculoskeletal system அல்லது Locomotor system எனப்படும்.தசையானது சுருங்கி, நீட்சியடையக்கூடிய தன்மை வாய்ந்தது, இப்படி சுருங்கி, நீட்சியடையும் போது தசை நார்கள் இயக்கப்பட்டு அதில் பல்வேறு வேதிவினைகள் ஏற்பட்டு, தசை நாண்களின் மூலமாக எலும்பு மூட்டுகளில் அசைவின் மூலம் உடலின் இடப்பெயர்ச்சி நிகழ்கிறது.
அன்றாட வாழ்வில் அடிக்கடி நாம் பிரயோகிக்கும் வார்த்தைகள்,
‘சுளுக்கு (Sprain)
தசைப்பிடிப்பு (muscle cramps)
தசைதிரிபு/ தசை மிகுதல் (strain)
சுளுக்கு (Sprain):
எலும்பு மூட்டு என்பது ஒன்றிற்கும் மேற்பட்ட எலும்புகளால் ஆனது. அந்த எலும்புகளை தாங்கிப்பிடித்து இணைப்பது தசை நாண்களே ஆகும் (ligament). தசைநாண்களில் ஏற்படும் காயத்தையே சுளுக்கு(Sprain) என்கிறோம். வேலைப்பளுவின் காரணமாக பல மாதங்களாக உடற்பயிற்சியோ, நடைபயிற்சி செய்ய இயலாமல் அலுவலகப் பணியிலேயே மூழ்கிக் கிடப்போம்,
வருடத்தொடக்கம் தந்த உற்சாகத்தில் மூன்று கிலோ மீட்டர் ஓடுவோம்.உள்ளத்தில் உள்ள உற்சாகம், உடலிலும் பாயும் தசைகள் தாறுமாறாக இயங்கும் தசை நாண்களுக்கு வேலைப்பளுவை கூட்டி கொடுத்து , மூட்டுகள் ஓவர் டைம் பார்த்து ஒடுங்கி விடும்.
அறிகுறிகள்:
வீக்கம்
வலி
அடிபட்ட இடம் நிறமாறுதல்.
அடிபட்ட பகுதி செயலிழத்தல் /அசைக்க முடியாமை.
காரணங்கள்:
சரியான warm up & cool down
செய்யாமை
தசைகளின் மீது அளவுக்கதிகமான அழுத்தம் .
சீரற்ற நடைபாதை/மைதானங்களில் பயிற்சி செய்தல்.
வலுவிழந்த தசை மூட்டுகள்.
சிகிச்சைமுறை:
தசை நாண் காயமானது மூன்று நிலைகளை உடையது
முதல்நிலை- லேசான காயம் – இதற்கு பெரும்பாலும் மருத்துவ உதவி தேவைப்படாது. ஐஸ் ஒத்தடம், சூடு ஒத்தடம், இலாஸ்டிக் பேண்டேஜால் மூட்டுகளை அசையாமல் காத்தல், ஓய்வெடுத்தல் இவற்றால் தன்னால் சரியாகிவிடும்.
இரண்டாம் நிலையில்:
இவ்வகை காயங்களில் பாதிக்கும் மேற்பட்ட தசைநாட்களில் காயம் ஏற்பட்ட, முறிவு ஏற்பட்டோ காணப்படும் இவற்றிற்கு மருத்துவச் சிகிச்சையும் , தொடர் பிசியோதெரபியும் மிகவும் அவசியம்.
மூன்றாம் நிலை: ஆழ்ந்த காயங்களாக இருக்கும். பெரும்பாலும் அறுவைசிகிச்சை தேவைப்படும், அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிசியோதெரபி மிகவும் அவசியம்.
தசைப்பிடிப்பு(cramps):
அதிகப்படியான உடற்பயிற்சியோ அல்லது பல்வேறு காரணங்களினால் உடலின் தசைகளின் நீர் இழத்தலின் போது அதிகப்படியான கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற மினரல்களையும் இழந்துவிடுவதால் திடீரென தசையில் பிடிப்பு ஏற்படுவதை தசைப்பிடிப்பு அல்லது ஆங்கிலத்தில் Cramps என்பர். சில நேரங்களில் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போதும் தசை பிடிப்பு ஏற்படும்.மருத்துவ உதவி இல்லாமலே சில நொடிகள் முதல் 15 நிமிடங்களுக்குள் சரிசெய்து கொள்ளும். வேண்டுமானால் streching போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
மது அருந்துபவர்கள்
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள்
சிறுநீரகம் செயலிழந்தவர்கள்
கர்ப்பகால தாய்மார்கள்
இவர்களுக்கு அடிக்கடி உண்டாகும்.
சரியான காரணிகளை கண்டறிந்து தற்காத்துக் கொள்வதே இதற்கு சிறந்த தீர்வாகும்.
தசை திரிபு/ பிசகுதல் (Strain):
தசை நார்களில் ஏற்படும் காயங்களை தசை பிசகுதல் அல்லது தசை திரிபு என்று கூறுவோம்.திடீரென ஒரு பத்து கிலோ எடையை தூக்கும் போது முதுகு பிடித்துக்கொள்ளும் அல்லது அதிக உடற்பயிற்சி செய்யும் போது பின்னந்தொடையில் ஒரு வலி ஏற்பட்டு காயம் உண்டாகும்.உடல் நிலை (posture) சரி வர பராமரிக்காமை போன்ற சிற்சில காரணங்களால் தசை பிசகுதல் உண்டாகும்.
அறிகுறிகள், சிகிச்சை முறை கிட்டத்தட்ட மேலே கூறியுள்ள தசை நாண் சுளுக்குரியதே ஆகும். ஆனால் தசைநாண் சுளுக்கை விட தசைப்பிசகல் வேகமாக குணமாகிடும்.
உடல்நிலை பராமரித்தலில் முக்கிய பங்காற்றுவது core muscles எனப்படும் இடுப்பு, அடிவயிறு, முதுகு தசைகளை வலுவேற்றுவதேயாகும்.
தசை சுளுக்கு, தசை பிடித்தல், தசை பிசகுதல் அடிக்கடி ஏற்பாடாமல் பாதுகாக்கும் வழிமுறைகள்:
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக warm up, cool down பயிற்சிகளை முறையாக செய்தல்.
சரியான உடல் எடையை பராமரித்தல்
சரியான உடல்நிலை தோற்றத்தை (posture) கையாளுதல் /பராமரித்தல்
தசைகளின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகப்படுத்தும் பயிற்சிகளை செய்தல் (stretching)
உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிக்கான சரியான காலணிகளை அணிதல்.
உடல் நீர்சமநிலையை காத்தல்
தேவையான ஊட்டச்சத்துக்கள் உட்கொள்ளுதல்
மூட்டுகளுக்கு அதிக வேலை கொடுக்கும் பயிற்சிகளை உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனை இல்லாமல் செய்வதை தவிர்த்தல்.
தசை வலுவேற்றும் பயிற்சிகளை முறையாக செய்தல்
தேவைக்கதிகமான பயிற்சிகளை சுயமாக செய்வதை தவிர்த்தல்
தசைப்பிடிப்பிற்கு Streching செய்யலாம். ஆனால் தசை சுளுக்கு, தசை பிசகுதலுக்கு செய்யக் கூடாது. அது காயத்தை மேலும் அதிகப்படுத்தும்.
இவை மூன்றிற்கும் முதலுதவி சென்ற கட்டுரையில் கூறிய R-I-C-E தான்.
அதாவது,
R- Rest -ஓய்வு
I-Icing – ஐஸ் ஒத்தடம்
C-Compression – எலாஸ்டிக் பேண்டேஜ் மூலம் அடிபட்ட இடத்தை சிறிது அழுத்தம் கொடுத்து கட்டுப்போடுதல்.
E-Elevation – அடிபட்ட காயம்பட்ட இடத்தை உயர்த்தி வைத்தல்.
தசை பிடிப்பு, தசை சுளுக்கு, பிசகுதல் போன்றவை படிப்பதற்கு ஒன்று போலவே தோன்றினாலும் அவற்றில் சிற்சில வேறுபாடுகள் உண்டு…
நீண்ட நாட்களுக்கு வலி, வீக்கம் குறையாமல் இருந்தாலோ உடல் செயலிழப்பு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சட்டம்
“அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு, பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு”.
அதாவது, அன்றாட வாழ்க்கைமுறை, செய்யும் தொழில் இவற்றுக்குத் தேவைப்படும் உடலின் சத்தும் ஆற்றலும் அறிந்து அந்த உடலின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து உண்பது ஆரோக்கியத்திற்கு வழி வகுத்து நோயிலிருந்து நம்மை காக்க உதவும்.
The post வலியை வெல்வோம் appeared first on Dinakaran.