நன்றி குங்குமம் தோழி
அரேபியன், பான் ஆசியன், கான்டினென்டல் என பல உணவகங்கள் இருந்தாலும், வீட்டில் அம்மாவின் கைப்பக்குவத்தில் ஒரு பிடி சாம்பார் சாதம், உருளை கறிக்கு ஈடு இணை என்றுமே கிடையாது. காரணம், ஒரு வாரம் ஓட்டல் உணவுகளை தொடர்ந்து சாப்பிட முடியாது. ஆனால் 365 நாளும் வீட்டு உணவுகளை சாப்பிட நம் மனம் ஏங்கும். அந்த ஏக்கத்தினை கடந்த ஒரு வருடமாக பூர்த்தி செய்து வருகிறார் அரவிந்த்.
இவரின் பூக்லே செயலி மூலம் வீட்டு கைமணத்துடன் உணவினை நம் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறார். இவரின் இந்த திட்டத்திற்கு உணவுத் துறையின் மிகவும் மதிப்புமிக்க Food Connoisseurs India விருது கிடைத்துள்ளது. சினிமாவிற்கு ஆஸ்கார் போல் உணவு துறைக்கு இந்த விருது. தன்னுடைய செயலியின் முதல் விருது பயணத்தை பகிர்ந்து கொண்டார் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அரவிந்த்.
‘‘பொறியியல் படிச்சிட்டு அமெரிக்காவில் அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். நான் ஒவ்வொரு முறை விடுமுறைக்காக சென்னைக்கு வரும் போது எல்லாம் அம்மா எனக்குப் பிடிச்ச உணவினை சமைச்சு தருவாங்க. ஆனால் கோவிட் போது அம்மாவினை நான் இழக்க நேரிட்டது. அம்மா நல்லா சமைப்பாங்க. அவங்க சாப்பாட்டில் அன்பு கலந்து இருப்பதை உணர முடியும். அப்பதான் நானும் அப்பாவும் ஒன்றை உணர்ந்தோம். அவங்க சாப்பாட்டினை நாங்க சுவைத்து சாப்பிடுவோமே தவிர நல்லா இருக்குன்னு சொன்னதில்லை.
ஆனா, அவங்க அதுபத்தி கேட்டதும் இல்லை. காரணம், சாப்பாடு நல்லா இருந்தா நானும் சரி அப்பாவும் சரி எக்ஸ்ட்ரா இரண்டு பிடி அதிகம் சாப்பிடுவோம். அதைப் பார்த்தே அம்மா புரிந்துகொள்வாங்க. அவங்க அமெரிக்கா வந்தாலும் அங்கும் வெளி சாப்பாடு வேணாம்னு சொல்லி அவங்களே சமைப்பாங்க. அப்படித்தான் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு தனிப்பட்ட கைப்பக்குவம் மற்றும் சுவை இருக்கும். அந்த நினைவுகளை மீட்டுக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது’’ என்றவர், பூக்லே ஆரம்பித்தது குறித்து விவரித்தார்.
‘‘எல்லோருக்கும் அவர்களின் அம்மாவின் சாப்பாடு என்றாலே தனி சுவை தான். சமையல் என்பது ஒரு கலை. அது நம் இந்திய பெண்களிடம் உள்ளது. சாதாரண ரசம் வைத்தாலும் அதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் இருக்கணும்னு நினைப்பாங்க. சமையல் மேல் இருக்கும் ஈடுபாடு. அதற்கு நான் அங்கீகாரம் கொடுக்க விரும்பினேன். வீட்டுச் சாப்பாட்டிற்காக ஒரு செயலியை அமைத்தேன். அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே அவர்கள் சமைக்கும் உணவினை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டேன். கிட்டத்தட்ட மற்ற உணவு செயலி போல்தான். ஆனால் அவர்கள் ஓட்டல் உணவினை வழங்குகிறார்கள்.
நாங்க வீட்டுச் சுவையில் அவரவர் சமையல் அறையில் சமைக்கும் உணவினை கொடுக்கிறோம். முதலில் இது குறித்து என் முகநூலில் பதிவு செய்தேன். 150 பேர் விண்ணப்பித்தாங்க. ஒவ்வொருவரின் உணவினை அவர்களை நேரில் சந்தித்து சுவைத்துப் பார்த்தேன். காரணம், நல்ல தரமான மற்றும் சுவையான உணவினை கொடுக்க வேண்டும். அதே சமயம் அதனை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் செய்கிறார்களா என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் தற்போது 100க்கும் மேற்பட்டவர்கள் என்னுடன் இணைந்து இந்தப் பயணத்தில் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றி எனக்கு தெரியும். எல்லோரும் குடும்பமாகத்தான் இணைந்து செயல்பட்டு வருகிறோம்’’ என்றவர், செயலியில் வழங்கப்படும் உணவு குறித்து தெரிவித்தார்.
‘‘நாங்க சென்னையில் மட்டும்தான் தற்போது செயல்பட்டு வருகிறோம். மேலும் எங்களுடன் இணைய 1500 பேர் விண்ணப்பித்து இருக்காங்க. அவர்களையும் என்னுடைய செயலியில் இணைத்து வருகிறேன். மேலும் என்னிடம் தற்போது இருக்கும் 100 பேரும் ஒவ்வொரு விதமான உணவுகளை வழங்கி வராங்க. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 40 கிலோ மீட்டர் இடைவேளையில் அவர்கள் தயாரிக்கும் சாம்பார் வித்தியாசப்படும். டிபன் சாம்பார், அரைச்சுவிட்ட சாம்பார், பொரிச்ச குழம்பு, பருப்பு சாம்பார்னு பல வகை இருக்கு. இது தவிர கொங்கு, செட்டிநாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாபி, சிந்தி, ராஜஸ்தானி என இந்தியா முழுக்க பல வகையான சமையல் உள்ளது. சென்னையில் அனைத்து மக்களும் வசித்து வருவதால், அவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான உணவுகளை வழங்கி வருகிறார்கள்.
இதே சாப்பாடு ஓட்டலிலும் உள்ளதேன்னு சொல்லலாம். ஓட்டலுக்கும் வீட்டுச் சாப்பாட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஓட்டல் சாம்பார் அனைத்தும் ஒரே சுவையில்தான் இருக்கும். ஆனால் இங்கு அதில் பல ரகங்களை கொடுக்கிறோம். அதற்கு கிடைத்த பரிசுதான் எங்களின் 7000 வாடிக்கையாளர்கள். இது அவர்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கான அடையாளம். உணவுப் பொறுத்தவரை நம்ம பக்கத்து வீட்டில் உள்ள கிரிஜா ஆன்டி சமைச்சு கொடுத்தா நாம எந்த ஆராய்ச்சியும் செய்யாம சாப்பிடுவோம். அது ஒரு ஓட்டலில் ஆர்டர் செய்யும் போது, அங்கு உணவு சுவையா இருக்குமா? தரமா செய்வாங்களான்னு பல ஆய்வுகள் செய்வோம்.
காரணம், கிரிஜா ஆன்டியின் சாப்பாடு அவங்க வீட்டுச் சமையல் அறையில் உருவானது. ஓட்டலில் பன்னீர் பட்டர் மசாலாவை பத்து நிமிஷத்தில் தயாரிப்பார்கள். வீட்டில் அப்படி செய்ய முடியாது. அதனால்தான் நீங்கள் சாப்பிட விரும்பும் உணவினை ஒருநாள் முன்பே ஆர்டர் செய்ய சொல்கிறோம். காரணம், இவர்கள் அனைவரும் ஆர்டரைப் பொறுத்துதான் அன்றைய உணவினை தயாரிப்பார்கள். மேலும் ஒருவரால் 10 பேருக்குதான் சமைக்க முடியும் என்றால், அதற்கு ஏற்பதான் நாங்க ஆர்டரும் பெறுவோம். இது கிளவுட் கிச்சனோ அல்லது ஒரு பிராண்டெட் உணவகமோ கிடையாது. பெண்களின் மேம்பாட்டிற்கான ஒரு தளம். அவங்க சமைச்சா போதும், அதற்கானமார்க்ெகட்டிங் மற்றும் டெலிவரி எல்லாம் எங்களின் பொறுப்பு’’ என்றவர், விருது குறித்து விவரித்தார்.
‘‘Food Connoisseurs India நிறுவனம் வருடா வருடம் சிறந்த உணவகத்தினை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி வராங்க. இந்தியாவின் பிரபல செஃப் மற்றும் விருந்தோம்பல் உணவுத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் என 16 பேர் நடுவர்கள். நாங்க பூக்லே துவங்கி ஒரு வருடமானதால், இந்த விருதுக்காக விண்ணப்பித்து இருந்தோம். உணவுத்துறையின் பல ஜாம்பவான்கள்தான் எங்களின் போட்டியாளர்கள். நாங்களோ சென்னையில் மட்டுமே இயங்கக்கூடிய சிறிய ஸ்டார்டப் நிறுவனம். எங்களின் செயல், உணவின் சுவை, தரம் மற்றும் ரகம் குறித்து பல கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டது. எங்களின் செஃப்களிடம் நேரடியாக பேசி அவர்களை பற்றி தெரிந்து கொண்டார்கள்.
எல்லாவற்றையும் விட பெண்களின் மேம்பாட்டிற்காக செயல்படும் ஒரு நிறுவனம் என்று புரிந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 2 மாதம் எங்களின் அனைத்து செயல்பாடு குறித்தும் கண்காணித்துதான் இந்த விருதினை வழங்கினார்கள். ஒரு வருட ஸ்டார்டப் நிறுவனமான எங்களுக்கு இந்த விருது மேலும் தன்னம்பிக்கையை கொடுத்திருக்கு. நாங்க எங்களை வளர்த்துக் கொள்ள ஒரு ஊக்கத்தை அளித்துள்ளது.
பூக்லே முழுக்க முழுக்க சென்னையினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம். தற்போது சென்னையில் பலஇடங்களில் இயங்கி வந்தாலும், வரும் வருடத்தில் சென்னையின் அனைத்துப் பகுதியிலும் எங்களின் சேவையினை துவங்க இருக்கிறோம். அதற்கான திட்டப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து டயர் 1 நகரங்களான பெங்களூரூ, ஐதராபாத், தில்லி போன்ற இடங்களிலும் ஆரம்பிக்க இருக்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திற்கும் தனிப்பட்ட கலாச்சாரம் உண்டு. உணவும் கலாச்சாரம் சார்ந்ததுதான். அதனை எங்களின் செயலி மூலம் ஒருங்கிணைக்க விரும்புகிறோம்’’ என்றார் அரவிந்த்.
தொகுப்பு: ஷன்மதி
The post உணவுக் கலாச்சாரத்திற்கு கிடைத்த மதிப்பான விருது! appeared first on Dinakaran.