செய்யாறு வட்டாரத்தில் பெஞ்சல் புயல் மழையால் 30 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சேதம்

*உதவி இயக்குனர் நேரில் ஆய்வு

செய்யாறு : செய்யாறு வட்டாரத்தில் பெஞ்சல் புயல் மழையால் 30 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்துள்ளதை உதவி இயக்குனர் மோகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டாரத்தில் செங்கட்டான்குண்டில், முக்கூர், மதுரை, முருகத்தான்பூண்டி, சேராம்பட்டு, சிறுங்கட்டூர், ஏனாதவாடி, தளரபாடி, ராமகிருஷ்ணாபுரம், விண்ணமங்கலம், முனுகுப்பட்டு, மேல்சீசமங்கலம், நாவல்பாக்கம், பெருங்களத்தூர், புளியரம்பாக்கம், வெளியநல்லூர், கொடநகர், சிறுவேளியநல்லூர், காழியூர், பரதன்தாங்கல் ஆகிய கிராமங்களில் பெஞ்சல் புயலால் தோட்டக்கலை பயிர்களான, கத்திரி, மிளகாய், புடலை, சவுக்கு, சம்பங்கி ஆகிய பயிர்கள் 30 எக்டருக்கும் அதிகமாக வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இதுவரை 17 எக்டர் வரை சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகன், தோட்டக்கலை அலுவலர் தொல்காப்பியன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பாலாஜி ராஜேஷ் கோபால்கிருஷ்னன் ஆகியோர் பயிர் சேத பாதிப்பை நேற்றுநேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆரணி: மேற்கு ஆரணி வட்டாரத்தில் புயல் மற்றும் தொடர் கனமழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு கணக்கீடு செய்ததில் 120 ஏக்கர் வாழை, காய்கறி, பூ வகை பயிர்கள் தேமடைந்துள்ளதாக தோட்டக் கலை உதவி இயக்குனர் பவ்யா தெரிவித்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்க பல்வேறு கிராமங்களில் விடுபட்டுள்ள, சேதம் அதிகமுள்ள பகுதிகளுக்கு சென்று கணக்கீடு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோட்டக்கலைத்துறை சார்பில் சுமார் 200 ஏக்கர் அளவில் காய்கறி மற்றும் பூ வகை என விவசாயிகளின் பயிர் பலத்த சேதம் அடைந்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு தோட்டக்கலை துறை மற்றும் வருவாய் துறை இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பாதிப்பு அடைந்த விவசாயிகளும் தோட்டகலை உதவி இயக்குனர் அலுவலகம் விரைந்து வருகை தந்து தங்களின் சேதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

The post செய்யாறு வட்டாரத்தில் பெஞ்சல் புயல் மழையால் 30 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: