இமயத்தில் கருணை கங்கையாக அவளும் கரைந்தாள். ஆனால், நீராட வரும் நங்கையாக மெல்ல நடந்து வந்தாள். ஏதும் அறியா பாலகி போல், ‘‘இங்கு யா ரைத் துதித்துக் கொண்டிருக்கிறீர்கள்’’ என்று மென்மையாகக் கேட்டாள். தானே அவர்களிடம் விநயமாக வெளிப்படுத்திக் கொண்டாள்.அம்பிகையை அடையாளம் தெரியாத தேவர்கள், ஒளியின் முன் இருள் விலகுவதுபோல் ஏதோ ஒரு தெளிவு பிறந்தது. பிரமிப்போடு நின்ற தேவர்கள் முன்பு மாபெரும் அதிசயம் நிகழ்ந்தது. அதோடு வேதத்தின் இலக்காக விளங்கும் பிரம்ம சக்தி முற்றிலும் வேறொரு உருக்கொண்டு வந்தது.சட்டென்று பார்வதியின் உடலிலிருந்து உயிர்சாரம் முழுவதும் திரட்சியாகப் பொங்கி வெண் மலையையே புரட்டி ஆடை போல் அணிந்த மகாசக்தி வெளிவந்தது. பார்வதி நழுவி கரிய காளியாகி பர்வத்திற்குள் சென்று மறைந்தாள். ஏனெனில், எல்லாச் செயலுக்கும் ஆதார மையமாக விளங்கும் விஷ்ணு மாயைத்தான் தேவர்கள் உள்ளத்தில் வைத்து துதித்தார்கள்.
இதுவும் ஆதி மகாசக்தியின் லீலையே.தீந்தொழில் புரிபவர்களை அழிக்க வந்திருப்பினும், தேவர்களைக் காத்து இன்னருள் புரிய உதித்திருந்தாலும் இவற்றோடு எதனாலும் பாதிப்படையாத பரப்பிரம்ம ஸ்படிகம் போன்ற சத்திய சொரூபமாக இவள் இருந்ததால் இவளை மகா சரஸ்வதி என்று அழைத்தார்கள். தேவர்கள் இருகரம் கூப்பி ‘கௌசிகீ’ என பெயரிட்டும் அழைத்தனர்.மகா சரஸ்வதி எழில் வடிவினள். வெண் பனியின் மலைச் சிகரத்தில் கருணைச் சிகரமாக அமர்ந்தாள். சிம்மத்தின் மீது அமைதியாக அமர்ந்து வீணாகானத்தில் லயித்திருந்தாலும், அம்பு, உலக்கை, சூலம், சக்கரம், சங்கம், மணி, கலப்பை, வில் ஏந்தி சந்திர ஒளியில் பிரகாசித்திருப்பாள். இமயக்கிரியில் அமைதிக் கோலம் பூண்டவள் வெகு விரைவிலேயே கோரக் கோலமாக சாமுண்டியாகவும், சும்ப – நிசும்பர்களை வதம் செய்யப்போகும் நிசும்பசூதனியாக வெகுண்டெழும் காலம் நெருங்கியது.இப்போது இந்த இடம்தான் தேவி மகாத்மியம் சொல்லும் மகாசரஸ்வதியின் ஆவிர்பாகம்.
இப்போது இந்த இடத்தில் சரஸ்வதி என்கிற பெயருக்குரிய இந்த சின்ன விஷயத்தைப் பார்க்கலாம்.சரஸ்வதி என்பதில் சரஸ் என்றால் பொய்கை என்று அர்த்தம். நாம் குளம் அல்லது புஷ்கரணி என்றும் சொல்கிறோம். சிறிய நீர் நிலைக்கு சரஸ் என்றும் பெயர். சின்ன நீர் நிலையில் எவள் வசிக்கிறாளோ அவளுக்கு சரஸ்வதி என்று பெயர். இப்போது நாம் சரஸ்வதியினுடைய படங்களைப் பார்த்தால் கூட அந்த குளத்தில் வெண் தாமரை பூத்து அந்த வெண் தாமரையில் சரஸ்வதி இருப்பாள்.இப்போது இந்த விஷயத்தை நாம் உள்முகமாக சென்று புரிந்து கொள்ள வேண்டும். என்னவெனில், சரஸ் என்றால் நீர் நிலை என்று அர்த்தம். ஈரம் இருந்து கொண்டேயிருக்கும் என்று அர்த்தம். நம்முடைய உடம்பிலே ஈரம் இருந்து கொண்டேயிருக்கும் ஒரு இடம் இருக்கிறது. அது வெறொன்றுமில்லை. அது நம்முடைய நாக்கு. நம்முடைய நாக்கே கூட ஒரு நீர் நிலைதான். அப்போது நம்முடைய சரீரத்தில் இருக்கக் கூடிய நீர் நிலையான நாக்கில் யார் வசிக்கிறாளோ அவளுக்கு சரஸ்வதி என்று பெயர்.இந்த இடத்தில் தேவி மகாத்மியத்தில் ஒரு விஷயம் பார்க்கிறோம்.
அம்பாளை தேவர்கள் ஸ்துதி பண்ணும்போது அம்பாள் எங்கு ஆவிர்பவிக்கிறாள் எனில், பார்வதி தேவி குளத்திற்கு நீராட வரும்போது அந்தக் குளத்தினுடைய கரையில்தான் சரஸ்வதியாக ஆவிர்பவிக்கிறாள்.இப்போது மீண்டும் அம்பாள் தன்னுடைய லீலையை தொடர்கிறாள்.சத்தியத்தின் நேர் துருவங்களாக, கொடுங்கோன்மையின் முழு உருவாக இருந்த சும்ப – நிசும்ப சகோதரர்களின் அணுக்கத் தொண்டர்களான சண்டனும், முண்டனும் இமயக்கிரியில் திரிந்திருந்தபோது கௌசீகியை கண்டனர். சிம்மத்தின் மீது அமர்ந்த அழகுச் சிகரத்தைப் பார்த்து திகைத்துப் போயினர். தம் அசுரத் தலைவர்களுக்கு இவளை அர்ப்பணித்தால் என்ன என்று குரூரமாக யோசித்தனர். சும்பனிடம் தாம் கண்ட பேரழகுப் பெண்ணைப் பற்றிச் சொல்ல காமம் தலைக்கேறியது, இவளே மாதேவி என அறியாத அற்பன் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள யோசித்தான். அவனின் அழிவு ஒரு விதையாக போக வடிவெடுத்து வந்தது.அசுரனின் அரசவையில் அழகிய குரலையுடையோனான சுக்ரீவன் என்பானை அழைத்தான். ‘எப்படியாயினும் இனிய மொழி பேசி அரசவைக்கு அழைத்துவா’ என்றான். மன்னனின் கட்டளையை மாதேவனின் வாக்காக ஏற்று அதிவிரைவாக இமயக் கிரியை அடைந்தான்.
கிரி கன்னிகையாக அமர்ந்திருந்த கௌசீகியை பார்த்து, ‘‘சும்பனின் அரசவையை ஒளிரூட்டும் பேரழகு படைத்தவளே…’’ என்று தொடங்கி அமிர்த வாக்காலும், மயக்கு வார்த்தைகள் பேசி சம்மதமா என்று முடித்தான். இவள் சம்மதித்து விடுவாள் என்றே முகத்தைப் பார்த்தாள். அதேபோல அவளும் சம்மதம் என்றாள். ஆனால், ‘‘யார் என்னுடன் போரிட்டு வெற்றி பெறுகிறார்களோ அவர்களையே மணப்பேன். அதையே நான் வரமாகப் பெற்றிருக்கிறேன்’’ என்றாள். ஒரு வஞ்சகப் பேச்சுக்கு மறு வார்த்தையாக இன்னொரு விஷத்தை வார்த்தைகளில் தோய்த்துப் பேசினாள்.கடுங்கோபத்தோடு நுழைந்தவன் விவரம் சொல்ல சும்பன் தூம்ரலோசனனை அழைத்தான். ‘தூம்ரம்’ என்றால் ‘புகை’ என்று பொருள். பொங்கும் புகையோடு பெரும் படையோடு கிளம்பியவன் கௌசீகியின் எதிரே கர்ஜிக்க, அவள் வாகனமாக இருந்த சிம்மத்தின் ஹூங்காரத்திலேயே கரைந்து வீழ்ந்தான். தூம்ரலோசனன் மாண்டான் என்பதை கேள்வியுற்ற சும்ப, நிசும்பரின் படைத்தலைவர்களாக விளங்கிய சண்டனும், புத்தியற்ற வெறும் உடற் கொழுப்பு கொண்ட முண்டனும் எங்களுக்கு நிகர்த்தவள் யாரவள் என்று திமிறிக் கிளம்பினர். மாபெரும் படையோடு வந்தவர்கள் கௌசிகீயை பார்த்து, ‘இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அப்படியே எங்களோடு வந்துவிடு’ என ஒரு அம்பை சிம்மத்தின் பிடரி பார்த்துச் செலுத்தினான்.
(தொடரும்)
ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்
The post மகா சரஸ்வதியின் மகத்துவம் appeared first on Dinakaran.