விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த மண்பானை ஓடுகள் தரம் பிரிப்பு

ஏழாயிரம்பண்ணை, டிச.9: வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் அகழாய்வில் அதிகளவில் கிடைத்து வரும் மண்பானை ஓடுகளை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவபொம்மை, தங்க அணிகலன்கள், சுடுமண் பானை, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 2,650க்கும் மேற்பட்ட பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் தோண்டப்பட்ட 13வது குழியில், சிறிய அளவிலான தங்கத்தால் ஆன குண்டுமணி கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தினசரி அதிகளவில் உடைந்த நிலையில் பெரிய அளவிலான சுடுமண் பானைகள் கிடைத்து வருகின்றன. அவ்வாறு கிடைக்கும் பானைகளை சுத்தம் செய்து தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வுகளிலும் சிறிய அளவிலான பானை ஓடுகள் மட்டுமே கிடைத்திருந்தது. தற்போது அதிகளவில் பெரிய அளவிலான பானை ஓடுகள் கிடைப்பதால் இங்கு தொழிற்கூடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன என்று அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இவைகள் எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறித்து முழு ஆய்வு செய்த பிறகே தெரிய வரும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த மண்பானை ஓடுகள் தரம் பிரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: