சேலம், டிச.9: சேலம் 4 ரோடு சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நேற்று தனியார் அமைப்பு சார்பில் 32வது அகில இந்திய நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட வகை நாய்களை, அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். ராட்வீலர், பொமரேனியன், ஜெர்மன் ஷெப்பர்ட், ராஜபாளையம், சிட்சு, பக், லேப்ரடார், ஐரீஸ் ஷெட்டர் உள்பட 50க்கும் மேற்பட்ட வகை நாய்கள், ஒவ்வொரு சுற்றாக கண்காட்சியில் இடம் பெற்றது.
இதற்காக மைதானத்தில் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வகையிலும் இடம் பெற்றிருந்த நாய்கள் வரவழைக்கப்பட்டு கால் அமைப்பு, நடந்து செல்லுதல், முகம் மற்றும் தோள், உரிமையாளர்களின் கட்டளையின்படி கீழ்படிதல், பொருட்களை எடுத்து செல்லுதல் உள்பட பல்வேறு செயல்களை செய்து காண்பித்தன. நாய் கண்காட்சியை காண சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து கண்டு ரசித்தனர்.
முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, நாய் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வகையிலும் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதுதவிர, கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து வகை நாய்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் விசு, சாந்தமூர்த்தி, சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
The post சேலத்தில் அகில இந்திய நாய் கண்காட்சி appeared first on Dinakaran.