போச்சம்பள்ளி, டிச.9: போச்சம்பள்ளியில் கனமழைக்கு கருப்புகவுனி நெல் ரகம் முற்றிலும் நாசமாகினதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. ஊத்தங்கரை, மத்தூர் பகுதியில் 50 செ.மீ., அளவுக்கு மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இப்பகுதியில் முழுக்க முழுக்க மானாவாரியில் சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மட்டும் நெல் உள்ளிட்ட புஞ்சை பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
நன்கு கதிர் பிடித்து பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். போச்சம்பள்ளி அருகே திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேடியப்பன் என்பவர், தனது நிலத்தில் காய்கறிகள், தானியங்கள் உற்பத்தி செய்து வருகிறார். கனமழையால் பெருக்கெடுத்த தண்ணீர் தோட்டத்திற்குள் புகுந்ததால், அறுவடை பருவத்தில் இருந்த நெற்பயிர் நாசமானது.
குறிப்பாக சுமார் 1 ஏக்கரில் கருப்புகவுனி சாகுபடி செய்திருந்தார். நன்கு கதிர் பிடித்து ஒரு வாரத்தில் அறுவடைக்கு வர இருந்த நெற்பயிர் முற்றிலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், இயற்கை முறையில் விளைவித்திருந்த அனைத்து காய்கறி செடிகளும் முழுவதுமாக சேதமடைந்தது. இதே கிராமத்தைச் சேர்ந்த மனமோகன் என்பவர், 2 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்த நிலையில், அனைத்தும் வெள்ளத்தில் நாசமானது. எனவே, வெள்ள சேதத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post போச்சம்பள்ளியில் கனமழையால் கருப்புகவுனி நெல் ரகம் முற்றிலும் நாசம்: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.