திருச்சி: ஹவுராவிலிருந்து சென்னை வழியாக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை 2.45 மணிக்கு வந்தது. அந்த ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த ரயிலிலிருந்து சந்தேகப்படும்படி கருப்பு பேக்குடன் ஒருவர் இறங்கி 6வது பிளாட்பாரத்தில் உள்ள சுரங்கப்பாதை வழியாக வேகமாக சென்றார். போலீசார் பின்தொடர்ந்து சென்று அந்த பயணியை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஆரோக்கியதாஸ் (49) என்பதும், அவரது பேக்கில் ரூ.500, ரூ.200 நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூ.75 லட்சம் இருந்ததும், பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ஹாவாலா பணம் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து ஆரோக்கியதாஸை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். வருமானவரித்துறை துணை இயக்குநர் ஸ்வேதா முன்னிலையில் வருமானவரித்துறையினரிடம் ரயில்வே போலீசார் நேற்று காலை ஒப்படைத்தனர். பணத்தை கொடுத்து அனுப்பியது யார், யாரிடம் ஒப்படைக்க எடுத்து சென்றார் என அவரிடம் விசாரணை நடக்கிறது.
The post திருச்சி ரயிலில் ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: தேவகோட்டையை சேர்ந்தவர் கைது appeared first on Dinakaran.