234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் இலக்கு களத்துக்கே வராதவர்கள் அரசியல் பற்றி பேசுகிறார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை: தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. இதில் குறைவு ஏற்படும் என்று நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் தொகுதி திமுக சார்பில் இல்லார்க்கு நாமே உறவு – எல்லோருக்கும் நாமே உறவு என்ற தலைப்பில் 10 கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ் குமார் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டு 10 கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சென்னை மேயர் பிரியா, பகுதி செயலாளர்கள் நாகராஜன், ஐ.சி.எப். முரளிதரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: திமுக அரசு பெண்களுக்காக ஏற்படுத்திய திட்டங்கள் தமிழ்நாடு மட்டும் இல்லை, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கு வழிகாட்டும் திட்டங்களாக உள்ளது. நீதி தேவதையின் ஆட்சி தமிழக முதல்வரின் ஆட்சி. அடுக்கடுக்கான திட்டங்களை ஆட்சியில் அள்ளிக் கொடுக்கும் முதல்வரை பார்த்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்ற கூட்டம் ஒன்று உள்ளது. தமிழகத்தின் அரசியல் தெரியாமல் அறியாமையில் சிலர் கருத்து கூறி வருகின்றனர். அவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் திமுக வென்று பதிலளிக்கும். திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. இதில் குறைவு ஏற்படும் என்று நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தமிழ்நாட்டு மக்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வருகிறார்கள், கருவறை முதல் கல்லறை வரை தமிழ்நாடு முதலமைச்சரால் ஏற்படுத்தப்பட்ட திட்டங்களால் நாடு சுபிட்சமாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் திமுக வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களின் நிலைப்பாடு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது அல்ல, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு. வில்லில் இருந்து புறப்படும் அம்பாக திமுக மீது எப்போதெல்லாம் அவதூறு பரப்பப்படுகிறதோ அப்போதெல்லாம் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திமுகவின் தொண்டன் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பான். 2026ல் திமுக தலைவரை மீண்டும் அரியணையில் ஏற்றும் வரையில் எங்களின் பயணம் ஓயாது, வேகம் குறையாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் இலக்கு களத்துக்கே வராதவர்கள் அரசியல் பற்றி பேசுகிறார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: