சத்தியமங்கலம், டிச. 8: ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகராட்சி வணிக வளாகம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நகராட்சி வணிக வளாகம் கால்நடைத்துறைக்கு சொந்தமான மந்தை நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்படுவதாகவும், கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டிகள் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் அதிமுக உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், இது சம்பந்தமாக நேற்று கடை அடைப்பு அறிவித்திருந்த நிலையில் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
மளிகை கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இதற்கிடையே பஸ் நிலையம் பகுதியில் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக, பாஜக, காங்கிரஸ், விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் 96 பேரை போராட்டத்திற்கு அனுமதி இல்லை என போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் உட்பட 96 பேர் கைது appeared first on Dinakaran.