ஜோதிட கணிப்புகளில் மதில்மேல் பூனை

ஜோதிட கணிப்புகளில் மதில்மேல் பூனை அமைப்பு உண்டு. அது தீர்க்கமான முடிவைத் தராது. பொதுவாகவே ஜோதிடப் பலனை யோசித்து சீர்தூக்கிப் பார்த்துச் சொல்ல வேண்டி இருக்கும். லக்னம், ராசி சிக்கல்கள் இல்லாத ஜாதகங்களுக்கே முடிவுகள் எடுப்பதில் பல குழப்பங்கள் இருக்கும். அதில் மதில்மேல் பூனையாக உள்ள சில ஜாதக அமைப்புகள் இன்னும் குழப்பத்தை அதிகப்படுத்தும்.

அது என்ன மதில் மேல் பூனை என்கிறீர்களா?

சந்தி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சந்தி என்பது சந்திப்பு என்பதைக் குறிக்கும். உதாரணமாக, இரவு வேளை முடிந்து பகல் வேளை தொடங்கும் புள்ளி “காலை சந்தி”. இரவும் பகலும் சந்திக்கும் புள்ளி என்று பெயர். அது இரவென்றும் சொல்லமுடியாது, பகல் என்றும் சொல்ல முடியாது. அதைப் போலவே பகல் முடிந்து இரவு தொடங்கும் நேரம் மாலை சந்தி. இதை அந்திநேரம் என்றும் சொல்வதுண்டு. இதைப் போலவே ஒரு நாட்டின் எல்லை அல்லது ஒரு நகரத்தின் எல்லை அல்லது ஒரு ஊரின் எல்லை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடங்கும். அங்கே ஒரு பலகை இருக்கும். இந்த ஊரின் எல்லை இதோடு முடிகிறது. அதே இடத்தில் இன்னொரு பலகை அடுத்த ஊரில் எல்லை ஆரம்பிக்கிறது என்று காண்பிக்கும். இதில் என்ன சிக்கல் என்று சொன்னால், உதாரணமாக ஒரு குற்றச் செயல் நடக்கிறது. போலீஸ்காரர்கள் அது எங்கள் எல்லையில் வரவில்லை என்பார்கள். காரணம் அந்த நிகழ்வு அந்த எல்லை சந்திப்பில் நடந்திருக்கும். அந்த இடம் எந்த அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இதேதான் ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும்பொழுது சில ஜாதகங்களில் நடக்கிறது.

ஜாதகத்தில் வரக்கூடிய சந்திகள்

1. ராசி சந்தி
2. லக்ன சந்தி
3. நட்சத்திர சந்தி

இதைப்போலவே திதி, கரணம், யோகம், வாரம் இவைகளிலும் சந்தி வரும் என்றாலும்கூட, அவைகள் பெரிய முக்கியத்துவம் பெறுவதில்லை. இப்பொழுது ராசி சந்தியைப் பார்ப்போம். உதாரணமாக, மேஷராசியில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கின்றன. அசுவினி நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள், பரணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்கள், கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் இவைகள் மேஷ ராசியில் இருக்கின்றன. கிருத்திகை நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்து, அது முதல் பாதத்தை கடந்து இரண்டாம் பாதத்தில் நுழைந்துவிட்டால், நட்சத்திரம் என்னவோ கிருத்திகையாக இருக்கும். ஆனால், ராசிக் கட்டம் ரிஷப ராசியாக மாறிவிடும். நொடி வித்தியாசத்தில் நட்சத்திர வேறுபாட்டை கவனித்து ராசியை நிர்ணயிக்கும் பொழுது, அது மேஷ ராசியா, ரிஷப ராசியா என்ற சிக்கல் வந்துவிடும். நட்சத்திரம் மாறாது, தசாபுத்திகள் மாறாது. (ஆனால் தசா புத்தியின் இருப்பு சற்று மாறும்) இதில் வாக்கியப் பஞ்சாங்கத்தில் ஒரு மாதிரியாகவும், திருக்கணித பஞ்சாங்கத்தில் ஒரு மாதிரியாகவும் போட்டிருக்கும். சிலர் வாக்கிய பஞ்சாங்கம்தான் சரி என்பார்கள். சிலர் திருக்கணித பஞ்சாங்கம் சரி என்பார்கள்.

இரண்டாவது லக்கின சந்தி

ராசியானது 12 வீடுகளை கொண்டது. ஒவ்வொரு வீடும் 30 பாகை கொண்டது. எனவே 30X12 = 360 பாகைகள். இதில் ஒரு ராசியின் கடைசி 1 பாகையும், அடுத்து வரும் வீட்டின் முதல் 1 பாகையும் மிக முக்கியமானது. இந்த பாகையில் லக்னம் அமைந்தால், அது “லக்னசந்தி’’ எனப் படும். ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட லக்னத்தின் முடிவுநேரத்தில் பிறந்தால், லக்ன நிர்ணயத்தில் சில குழப்பங்கள் வரும். இது ராசி கட்டத்தைவிட மோசம். காரணம், லக்னம் மாறினால் பாவங்கள் மாறும். பாவங்கள் மாறும்போது பலன்கள் சொல்வதில் வித்தியாசம் ஏற்படும். பிறகு சொல்லும் பலன் எதுவும் நடக்கவில்லையே என்று ஆகிவிடும். ஜாதகத்தில் பலன் கணிக்கும்போது, லக்னம் சந்தி வந்தால், லக்னத்தை உறுதிபடுத்தும் அளவிற்கு கிரககாரக ஆதிபத்திய பலனை ஒருவர் மிக நுட்பமாக கையாள வேண்டும்.

மூன்றாவதாக நட்சத்திர சந்தி

சில நேரங்களில் ராசி அதே ராசியாக இருக்கும். ஆனால், நட்சத்திரம் எது என்று நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். உதாரணமாக, புனர்பூசம் நாலாம் பாதமும், பூசம் ஒன்றாம் பாதமும் சந்திக்கும் அந்த புள்ளிதான் நட்சத்திர சந்தி. ஆனால், பூசமாக இருந்தாலும், புனர்பூசமாக இருந்தாலும், கடக ராசி யாகத்தான் இருக்கும். ஆனால், நட்சத்திரம் எது என்பதை நிர்ணயம் செய்வதில் குழப்பம் வந்துவிடும். இதைத்தான் மதில்மேல் பூனை என்பார்கள். இதிலும் மூன்று விஷயங்கள் உண்டு. பூனை இந்த பக்கம் குதிக்குமா அந்த பக்கம் குதிக்குமா, எந்த பக்கம் அது குதிக்கும் என்பதை தீர்மானம் செய்வதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது.சில நேரங்களில் எந்த பக்கம் குதித்தாலும் சாதகமாக இருக்கும். அப்போது பலனை நிர்ணயம் செய்வது எளிது. அதைப்போலவே, எந்தப் பக்கம் குதித்தாலும் அது துரதிஷ்டமாகவே இருக்கும். அப்பொழுதும் பலனை நிர்ணயம் செய்து விடலாம். உனக்கு இன்னும் கொஞ்ச நாள் கஷ்டம்தான் போ என்று சொல்லி விடலாம். ஆனால், ஒரு பக்கம் துன்பமும், ஒரு பக்கம் சாதகமும் இருக்கும் பொழுது, சாதகமான பலன் நடக்குமா துன்பமான பலன் நடக்குமா என்பதை நிர்ணயம் செய்வதில்தான் குழப்பம் ஏற்படும். இதைப்போன்ற ஜாதகங்களுக்கு லக்ன ராசி நட்சத்திர நிர்ணயங்களில் சில முறைகள் உண்டு.அவர்கள் உறவினர்கள் போன்ற சில விஷயங்களை சீர்தூக்கிப் பார்த்து, உங்கள் அம்மாவுக்கு இப்படி இருக்கிறதா, அப்பாவுக்கு இப்படி இருக்கிறதா என்பதைக் கேட்டு லக்கினத்தை ஓரளவு தீர்மானம் செய்துவிடமுடியும். ஆனால், பிறந்த குழந்தைக்கு என்ன விதமான பலன்கள் நடக்கும் என்பதை சற்று நிதானித்துத்தான் சொல்ல வேண்டி இருக்கும். பெரியவர்கள் விஷயத்தில் கடந்த காலங்களை வைத்துக் கொண்டு ஓரளவு நிர்ணயம் செய்துவிடலாம். ஆனால், குழந்தைகள் விஷயத்தில் எதிர்காலப் பலன் சொல்வதில் இதைப்போன்ற சந்தி விவகாரங்கள் வந்துவிட்டால், சற்று சிரமப்படத்தான் வேண்டி இருக்கும். ஜாதகங்களுக்கு பலன் சொல்வது சவாலான விஷய மாகவே இருக்கும். ஜாதகரின் வாழ்விற்கும் ஜாதக அமைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் வந்தால், தாராளமாக லக்னத்தை முன் அல்லது பின்னாக மாற்றி பலனை உறுதிப்படுத்தலாம்.

பராசரன்

 

The post ஜோதிட கணிப்புகளில் மதில்மேல் பூனை appeared first on Dinakaran.

Related Stories: