மகரராசி குமரப் பருவம் கொஞ்சும் பருவம்

பகுதி 2

மகர ராசி மகன் சிறு வயதிலேயே மனமுதிர்ச்சியுடன் தன் இளைய சகோதரர்கள் மீது மிகுந்த பாசமும் அக்கறையும் கண்டிப்பும் காட்டுவான். இவர் அக்குடும்பத்தின் தந்தையாகவே தன் இளைய சகோதரரிடம் செயல்படுவான். இவருக்கு 14,15 வயதாகிவிட்டால், தாய் தந்தையரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவான். மொத்தக் குடும்பமும் இவனைக் கண்டால் அஞ்சும் வகையில் அமைதியாகும் வகையில் இவனுடைய ஆளுமை இருக்கும்.

மந்தமும் சொந்தமும்

மகர ராசி குமரப் பருவத்தினர் விளையாட்டை டிவியில் ரசிப்பர். பொதுவாக விளையாட்டில் விருப்பம் இருக்காது. ஆனால், விளையாட்டைப் பற்றிய விளையாட்டு வீரர்களைப் பற்றிய தகவல்கள் இவர்களுக்கு நிறைய தெரிந்திருக்கும். மகரராசி மண் ராசி என்பதால், இந்த ராசியில் பிறந்தவர்கள் பார்ப்பதற்குச் சற்று மந்தமாகத் தெரிவார்கள். இவர்கள் பட படவென்று பேசுவதோ, ஓடி ஆடி விளையாடுவதோ கிடையாது. பெரியவர்கள் இருக்கும் அறையில் ஓரிடத்தில் அமர்ந்து அனைவரையும் கூர்ந்து கவனித்து மனதுக்குள் அவர்களைப் பற்றிய மதிப்பீட்டை இவன் வரைந்து கொண்டிருப்பான். வெற்றி, புகழ் ஆகியவற்றை மட்டுமே லட்சியமாகக் கொண்ட மகர ராசிக் குமரன், அதற்கேற்ற ஆட்களுடன்
மட்டுமே பழகுவான்.

மகரராசிக் குமரி

மகர ராசிக் குமரி, பருவக்குமரி ஆகினாலும் பாதுகாப்புத் தேடும் பச்சைக் குழந்தையாகவே இருப்பாள். யாராவது ஒரு தோழியோ உறவினரோ அவளை இரு கைக்குள்ளும் தாய்ப்பறவை தன் குழந்தையை அணைப்பது போல அணைத்துக் கொள்ள வேண்டும். படிப்பு, மன உறுதி, நேர்மை ஆகிய நற்பண்புகளுடன் விளங்கும் இக்குமரி, அம்மாவுக்கும் ஆசிரியருக்கும் உறுதுணையாக இருப்பாள். தோழிகளுக்கு நிறைய உதவுவாள். ஆனால், யாராவது இவளை விமர்சனம் செய்துவிட்டால், அவர்களிடம் எதிர்த்துப் பேசி அந்த மனக்கசப்பை தீர்க்க முனைய மாட்டாள். அப்படியே நைசாக ஒதுங்கிவிடுவாள். இதுதான் மகரராசியின் மிகப்பெரிய பலவீனமாகும்.

சாகச விரும்பிகளின் ரகசிய விருப்பம்

மகரராசி குமரர்களுக்கு, ராஜா ராணிக்கு கதைகள், சாகசக்காரர்கள், ஏலியன்கள் போன்றவை பிடிக்கும். எலி, பூனை கதைகள் பிடிக்காது. தன்னை ஒரு ராஜாவாகக் கற்பனை செய்துகொண்டு மகிழ்வார்கள். இவர்களின் நடை, உடை, பாவனைகூட, ஒரு ராஜாங்கம் நடத்துவது போலவே பள்ளியிலும் கல்லூரியிலும் காணப்படும். ராஜா என்றால் போரில் தான் முன்னே போய் நிற்காமல் தன்னுடைய படை பரிவாரங்களை அனுப்பிவிட்டு இருந்த இடத்திலேயே வெற்றிச் செய்தியைப் பெற்று மகிழும் மாமன்னர் இவர்கள். எந்த ஒரு பொதுப் பிரச்னைக்கும் முன்னால் போய் நிற்கவும், போராடவும் பயப்படுவர்.

மாணவர் ஆசிரியர் தொடர்பு

மகரராசிப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர், தன் ஆசிரியர்களை மிகவும் வியந்து அவர்களைத் தேவதைகள் போலவும் தெய்வங்கள் போலவும் பார்ப்பார். ஆனால், இவர்களின் வியப்பும் ரசனையும் வெளியே யாருக்கும் தெரியாது. சிலரை மனதுக்குள்ளேயே காதலிப்பர். மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு அவர்கள் மீது பேரன்பையும் பெரு வியப்பையும் வளர்த்துக் கொள்வர். தான் வியக்கும் ஆசிரியர்களைத் தினமும் ஓடி ஓடிப் போய்ப் பார்த்து அவர்கள் அருகிலேயே சிறிது நேரம் நின்றுகொண்டிருப்பார். தான் விரும்பும் மாணவியருக்கு கூட்டத்தில் வைத்து செலவு செய்வர். தனியாக சந்தித்து பேசவும் பழகவும் அஞ்சுவர். உறவினர்களில் சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா போன்ற சிலரைத் தன் சாகச நாயகர்களாகக் கருதி வியப்பர்.

ஷாக் ட்ரீட்மெண்ட் அவசியம்

மகரராசி குமரர்களை பெற்றோர் அல்லது பெரியவர்கள் கோபித்தால் `ஏண்டா கோபித்தோம்’ என்று நினைத்து வருந்தும் அளவுக்கு இவர்கள் முரண்டு பிடிப்பார்கள். பின்பு பெரியவர்களே இவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் நிலை வந்துவிடும். `இனி உன்னை திட்ட மாட்டேன், அடிக்க மாட்டேன் சாப்பிட வா’ என்று கெஞ்சும் அளவுக்கு இவர்களுடைய வறட்டுக் கௌரவமும் அசட்டுப் பிடிவாதமும் இருக்கும். இது ஒரு தவறான செயல் என்றாலும்கூட வேறு வழி இல்லாமல் உடன் இருப்பவர்கள் தன் பிள்ளையைச் சமாதானப்படுத்திச் சாப்பிட வைப்பார்கள். ஆனால், அதற்குப் பிறகு அவனோ அவளோ, தான் அடி வாங்கியதை வாழ்நாளில் மறப்பதில்லை. அந்தத் தவறைத் திரும்ப எங்கும் எவரிடமும் செய்யமாட்டார்கள். அதனால் தேவைப்படும் போது மகர ராசிக் குமரப்பருவத்தினருக்கு இந்த ஷாக்
டிரீட்மெண்ட் அவசியம்.

காலக் கணிதன்

மகரராசி மாணவர் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நொடியும் திட்டமிட்டுச் செயல் படுவர். இன்றைக்கு இந்த பாடத்தைப் படித்துவிட வேண்டும். எட்டு மணிக்குள் இந்த ப்ராஜக்ட் ஒர்க்கை முடித்துவிட வேண்டும் என்று இன்னும் பத்து நிமிடத்தில் இந்தப் படத்தை வரைந்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, ஒவ்வொரு நொடிப் பொழுதையும் தன் விருப்பப்படி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர். இக்குமரனைக் காலக் கணிதன் எனலாம்.

உள்ளே வெளியே

இளம் வயதிலிருந்தே அச்சம் காரணமாக வரும் பொறுமை வயதான பின்பு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதனால் ஏற்படும் நிதானம், இவர்களின் வெற்றிக்குப் பெரிதும் உதவும். கடின உழைப்பும் ஒப்படைப்பும் கொண்ட இவர்கள் தன்னை யாராவது உதாசீனப்படுத்தும்போது, மனம் உடைந்து நொறுங்கி ஓடி மறைந்துவிடுவர். தான் நினைத்ததை சாதிக்க முடியவில்லை தோற்றுவிட்டோம் என்ற எண்ணம் வந்தாலும், இவர்களை நாம் கண்ணில் காண முடியாது. அதைப் பெரிய அவமானமாகக் கருதி குறைந்தபட்சம் சில நாட்களாவது, வாரங்களாவது வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பர். மேடையில் முழங்கும் இவர்கள் சாதாரணமாக பேசும்போது மிகவும்
தயங்குவர்.

பொழுதுபோக்கு

மகரராசிக் குமரர்களுக்கு, விளையாட்டுக் குணம் என்பது மிகவும் குறைவு. விளையாட்டாக கேலி கிண்டல் பேசமாட்டார். விளையாட்டுத் திடலில் போய் ஓடி ஆடி விளையாடவும் விரும்புவதில்லை. மாணவர்கள் உட்கார்ந்து ஒரு இடத்தில் எதையாவது கேலி கிண்டல் பேசிக் கொண்டிருந்தால், அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்து முகத்தில் ஒரு சிறு புன்னகைக் கீற்றுடன் அவர்களின் பேச்சை ரசிப்பார். சில சமயம், வெடிச் சிரிப்பு சிரிப்பார். சிரிக்க சிரிக்கப் பேசிய அந்த நண்பருக்கு நன்றாக செலவு செய்வார். ஏதேனும் ஒரு கதை, பாட்டு பற்றி பேசிக்கொண்டிருந்தாலோ கேட்டுக் கொண்டிருந்தாலோ அந்த இடத்தில் அமைதியாக புத்தரைப் போல் இருந்து அவற்றை ரசிப்பார். பெரும்பாலும் மகர ராசி இளைஞர், வேர்க்க விறுவிறுக்க உடல் கை கால் சோர்ந்து போகின்ற வேலைகளில் அல்லது விளையாட்டில் ஈடுபடமாட்டார். ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு தொடங்கி முடிக்கும் இவருக்கு விளையாட்டுக்கு என்று தனி நேரம் ஒதுக்க இயலாது.

விதிகளும் கட்டுப்பாடும்

மகரராசி குமரர் எப்போதும் தங்களுக்கென்று சிறிய சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு, சில வரையறைகளை உருவாக்கிக்கொண்டு அதற்குள்ளேதான் இருப்பார். இவர்களுக்குத் தலைமைத்துவப் பண்பு இயற்கையிலேயே இருந்தாலும், தானாக அப்பண்பினை செயல்படுத்துவதில்லை. 10 பேர் இவரை அழைத்துப் பாராட்டி தலையில் ஒரு கிரீடத்தை வைத்தால் மட்டுமே இவர் தன் அதிகாரத்தை குதிரை சவுக்கை ஒரு சுழற்று சுழற்றிக் காட்டத் தொடங்குவர்.

முனைவர் செ.ராஜேஸ்வரி

 

The post மகரராசி குமரப் பருவம் கொஞ்சும் பருவம் appeared first on Dinakaran.

Related Stories: