6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை

பெரம்பலூர்,டிச.7: பெரம்பலூர் அருகே கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்ட விவசாயியை மின்கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கிய 6 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்சிஎஸ்டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(44). இவரது மனைவி ஜெயந்தி (30). பூலாம்பாடியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் வெளிநாடு செல்வதற்காக சண்முகத்திடம் ரூ.10 ஆயிரம் கடனாகப் பெற்று இருந்தார். கடன் கொடுத்து நீண்டநாளான நிலையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக ஆத்திரம் அடைந்த ஜெயராமனுக்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம்(62), ராஜேஷ் (32), குமார்(47), கோவிந்தராஜ் (52), நாட்டார் என்கிற ராஜீ (55), ஆதிமூலம் (32) ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற சென்ற சண்முகத்தை வழிமறித்து சாதியை கூறி திட்டி, நீ எப்படி பணத்தைக் கொடு என கேட்கலாம் என்று கேட்டு, சொசைட்டி முன்பு உள்ள மின் கம்பத்தில் கயிறால் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

இதனைப் பார்த்த சண்முகத்தின் மனைவி ஜெயந்தி அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து போலீசார் வந்து சண்முகத்தை மீட்டுள்ளனர். இது தொடர்பாக ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் எஸ்சி எஸ்டி பிரிவுக்கான அரசு சிறப்பு வழக்கறிஞர் புகழேந்தி ஆஜராகி வந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றம்சாட்டப்பட்ட ஆறுமுகம், ராஜேஷ், குமார், கோவிந்தராஜ், நாட்டார் என்கிற ராஜீ, ஆதிமூலம் ஆகிய 6 பேருக்கு 3 மாதம் சிறை, ரூ.500 அபராதம், 1 மாதம் சிறை, ரூ500 அபராதம், 1 வருடம் சிறை, ரூ1000 அபராதம் எனவும் தண்டனையை அனைவரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் பெரம்பலூர் மாவட்ட எஸ்சி-எஸ்டி பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) இந்திராணி உத்தரவிட்டார். இதன்படி ஒவ்வொருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ 2000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

The post 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: