×

தேனாடு பகுதியில் வலம் வரும் காட்டு மாடுகளால் அச்சம்

 

ஊட்டி, டிச.7: நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, காட்டு மாடுகள், சிறுத்தை, கரடி போன்றவைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் உணவு தேடி மக்கள் வாழும் பகுதியை முற்றுகையிடுகின்றன. குறிப்பாக, வனங்களை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் இந்த காட்டு மாடுகள் முகாமிடுகின்றன.

மேலும், இவைகள் மலை காய்கறி தோட்டங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் கூட்டம் கூட்டமாக வலம் வருவதால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதித்துள்ளனர். சில சமயங்களில் இந்த காட்டு மாடுகள் பகல் நேரங்களிலேயே குடியிருப்புகளுக்குள் வந்து விடுகின்றன. மேலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகள் மற்றும் கடை வீதிகள் போன்ற பகுதிகளிலும் வந்து விடுகின்றன.

இவைகள் பொதுமக்களை விரட்டவில்லை என்ற போதிலும், இதனை கண்டு பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடும் போது விழுந்து விபத்து ஏற்படுகிறது. தற்போது ஊட்டி அருகேயுள்ள தேனாடு மற்றும் மைனலை மட்டம் பகுதியில் அடிக்கடி காட்டு மாடுகள் கூட்டம் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருகின்றன. இதனால், பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். எனவே, இந்த காட்டு மாடுகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தேனாடு பகுதியில் வலம் வரும் காட்டு மாடுகளால் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Thenadu ,Ooty ,Neelgiri district ,Denadu ,Dinakaran ,
× RELATED சென்னையில் நடக்கும் மலர்...