தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் பக்தர்கள் ஆர்வமுடன் காணிக்கை செலுத்தினர் தி.மலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் தங்க கொடிமரம் அருகே தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் நேற்று வைக்கப்பட்டது. அதில், பக்தர்கள் ஆர்வமுடன் காணிக்கை செலுத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. வரும் 13ம் தேதி மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். அதையொட்டி, ராஜகோபுரம் அருகே திட்டிவாசல் பகுதியில் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், நெய் காணிக்கையை பணமாகவும், காசோலை மற்றும் வரைவோலையாகவும், பணப்பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தியும், இணையதளம் மூலமும் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவத்தின்போது, கோயில் தங்க கொடிமரம் அருகே பிரார்த்தனை உண்டியல் அமைப்பது வழக்கம். தீபத்திருவிழாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்துவது அண்ணாமலையார் கோயிலின் மரபாகும்.

அதன்படி, நேற்று காலை கோயில் 3ம் பிரகாரத்தில் தங்க கொடிமரம் அருகே பிரார்த்தனை உண்டியல் வைக்கப்பட்டது. அப்போது, இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், இராம.பெருமாள் மற்றும் முன்னாள் நகராட்சி தலைவர் இரா.தரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்தினர். அதைத்தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் தீபத்திருவிழா காணிக்கை செலுத்தினர். வரும் 13ம் தேதி வரை பிரார்த்தனை காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post தீபத்திருவிழா பிரார்த்தனை உண்டியல் பக்தர்கள் ஆர்வமுடன் காணிக்கை செலுத்தினர் தி.மலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: