ருசக என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வரப்பெற்றது. ருசக என்றால் கோபம், கடுங்கோபம், ஆத்திரம் என்றும் பொருள். இது உணர்வுத் தன்மையாக இருந்தாலும், இந்த உணர்வை வெளிக்
கொணர்வது செவ்வாய் என்று புரிந்து கொள்ளலாம். ஆகவே, கேந்திரங்களில் செவ்வாய் இருப்பது ருசக யோகமாக சொல்லப்படுகிறது. சிலரின் ஜாதகத்தில் ருசக யோகம் செயல்படாது. சிலரின் ஜாதகத்தில் மிகுந்த பலன்களை வாரி வழங்கும் தன்மையுடையதாக இருக்கிறது. ருசகத்தின்
அதிசயத்தை காணலாம்.
ருசக யோகத்தின் அமைப்பு
கேந்திர ஸ்தானங்கள் என சொல்லக் கூடிய லக்னம் (1ம்), சுகஸ்தானம் (4ம்), சப்தம ஸ்தானம் (7ம்), கர்ம ஸ்தானம் (10ம்) ஆகிய பாவங்களில் செவ்வாய் ஆட்சி பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ அமர்வது ருசக யோகமாகச் சொல்லப்படுகிறது. சில பாவங்களில் பரிவர்த்தனை அடைந்தும் இந்த ருசகயோகம் வலிமையாக இயங்குகிறது. வியாழன் பார்வையில் இந்த செவ்வாய் இருந்தால்
சிறப்பான பலன்கள் உண்டு.
ருசக யோகம் இருந்தும் தடைபடும் அமைப்புகள்
* செவ்வாயுடன் சனி நெருக்கமாக அமர்வதும் செவ்வாயை சனி பார்வை செய்வதும் ருசக யோகத்திற்கு தடை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
* செவ்வாயுடன் குறிப்பாக, ராகு என்ற சாயகிரகம் இணைவது என்பதோ, பார்வை செய்வதும் தடையை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
* செவ்வாயுடன் சூரியன், புதன், தேய்பிறை சந்திரன் போன்றவைகள் ருசக யோகத்திற்கு சில தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
* செவ்வாயுடன் சுக்கிரன் இணைவது நல்ல அமைப்பாக இருந்தாலும் சில மாறுபாடுகள் ஏற்பட்டு வாழ்வில் தடம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* செவ்வாயின் மீது அசுப கிரகங்களின் பார்வையும் தடை ஏற்படுத்தும்.
* உச்சம் பெற்ற செவ்வாய் கிரகத்தை உச்சம் பெற்ற கிரகம் பார்வை செய்யும் போது கிரகங்கள் ஒன்றுக்கொன்று சப்தம பார்வை ஏற்படும் போது மட்டுப்படுகிறது. உச்ச கிரகமும் மற்றொரு உச்ச கிரகமும் பார்வை ெசய்யும் ஆற்றல்களின் போட்டியினால் கிரகங்கள் இருக்கும் வீட்டிலிருந்தே பரிவர்த்தனை பெறுகிறது. அப்பொழுது கிரகத்தின் பலம் குறைந்து நீசத்தை அடைகிறது.
ருசக யோகத்தின் பொதுவான பலன்கள்
* கேந்திரங்களில் செவ்வாய் இருப்பதால், நிலபுலன்கள் வாங்குவது, விற்பது, கட்டுமானங்கள் ஆகியவை சிறப்பாகவும் எளிதாகவும் அமையும்.
* உடலை எப்பொழுதும் வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குள் இருக்கும். ஆதலால், உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி செய்பவராக இருப்பர்.
* இவர்கள் எல்லா விஷயங்களிலும் வேகமாக இருப்பர். அந்த வேகத்தினால் சில நற்பண்புகளையும் சில அவமானங்களையும் சந்திப்பர். கோபம் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கோபம் என்ற குணத்தினை தவிர்த்தால் இவர்களுக்கு வெற்றி உண்டு.
* செவ்வாய்க்கு நான்காம் பார்வையும் (4ம்), சப்தம பார்வையும் (7ம்) இருப்பதால், ஸ்திரமான உறுதியான வீடுகளை கட்டுவதற்குரிய எண்ணங்களை தங்களுக்குள் வைத்திருப்பர்.
* நிலம் என்பது செவ்வாயாக இருப்பதனால், நிலத்தின் மூலம் உணவை உற்பத்தி செய்வதற்கான சக்தியையும் இவர்களே செய்யும் எண்ணத்தையும் ஆற்றலையும் கொண்டிருப்பர். விவசாயிகளாக இருக்கும் பலருக்கும் இந்த ருசக யோகம் இருக்கும்.
* லக்னம் மற்றும் கேந்திரங்களில் அமர்வதால் ஜாதகர் உடல் பருமனாக வாய்ப்புள்ளது. இவர்கள் தங்களின் வலிமையால் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சிப்பர். ஆனால், இந்த செவ்வாய் குருவின் பார்வையில் இருந்தால் தேகம் கண்டிப்பாக பருத்திருக்கும் என்பது நிச்சயம்.
* ருசக யோக அமைப்புள்ளவர்களே காவல்துறையிலும், ராணுவத்துறையிலும் பணியாற்றும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றனர். செவ்வாய் என்றால் அதிகாரம் என்பதால் புரிந்து
கொள்ளலாம்.
* தொழிலில் ஒரு முத்திரையை பதித்து சிறப்பாக செய்யும் அமைப்புள்ளவர்கள். எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு தொழிலில் ஒரு யுக்தியை கையாளும் திறமையும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு.
லக்னம் மற்றும் ராசியை அடிப்படையாகக் கொண்ட பலன்கள்
* மேஷத்திற்கு – லக்னம் (1ம்), பத்தாம் பாவங்களில் (10ம்) அமர்ந்து ருசகயோகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆளுமைத்திறன் உள்ளவர்களாக தொழிலில் வெற்றியை இலக்காக கொண்டவர்களாக இருப்பர்.
* கடகத்திற்கு – சப்தம ஸ்தானம் (7ம்) என்ற ஏழாம் பாவத்திலும் ஜீனஸ்தானம் (10ம்) எனச் சொல்லக்கூடிய மேஷத்திலும் செவ்வாய் அமர்ந்து ருசகயோகத்தை செய்யும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு சமூகத்தில் உயரிய அந்தஸ்தும். தொழிலில் மிகுந்த முன்னேற்றமும் இருக்கும். ஏழாம் பாவத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ளதால் வருகின்ற மனைவிக்கும் செவ்வாய் கேந்திரத்தில் இருப்பது சிறப்பை தரும். இல்லாவிடில் இரண்டு மூன்று களத்திரம் உண்டாக வாய்ப்புண்டு.
* சிம்மத்திற்கு – நான்காம் பாவம் (4ம்) என்று சொல்லக்கூடிய சுகஸ்தானத்தில் அமர்ந்து ருசக யோகத்தை ஏற்படுத்தும். இந்த அமைப்பு உடையவர்கள் அசைவப் பிரியர்களாக இருப்பர். மேலும், இவர்களுக்கு உடல்
பருப்பதற்கான வாய்ப்புண்டு.
* துலாம் பாவத்திற்கு நான்காம் பாவம் (4ம்) மற்றும் ஏழாம் பாவம் (7ம்) செவ்வாய் ஆட்சி, உச்சம் அடைந்து ருசகயோகத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் மனைவியின் வரவிற்கு பின் மிகுந்த யோக பலனை அடைவர்.
* மகரத்திற்கு நான்காம் பாவத்திலும் (4ம்) செவ்வாய் ஆட்சி பெற்று ருசகயோகம் உண்டாகிறது. இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு நிலம் வாங்குதல், விற்பனை செய்தல் போன்றவற்றில் நற்பலன்கள் உண்டாகும்.
* கும்பத்திற்கு பத்தாம் பாவத்தில் (10ம்) செவ்வாய் அமர்ந்து ருசக யோகம் உண்டாகும். இவருக்கும் தொழிலில் அதிகமான வெற்றி வாய்ப்புகளை உண்டாக்கும்.
கலாவதி
The post ருசக யோகம் appeared first on Dinakaran.