×

தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் வீடியோ காலில் கைதிகளுடன் பேசும் வசதி அறிமுகம்: சேலத்தில் 8 மானிட்டர்கள் பொருத்தம்

சேலம்: தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகளில் கைதிகளை உறவினர்கள் வீடியோகாலில் பார்த்து பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சேலம் சிறையில் 8 மானிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 மத்திய சிறை, மாவட்ட, கிளைச்சிறை என மொத்தம் 136 சிறைகள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உறவினர்கள் பார்க்க வந்தால் சிறையில் இரும்பு கம்பிகளுக்கு இடையில் நின்று தான் பேச முடியும். ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட கைதிகளும், அவர்களின் உறவினர்களும் நின்று பேசுவதால் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க முடியாது. ஒரே சத்தமாக இருக்கும். இக்குறையை போக்கும் விதமாக சிறையில் இருந்து உறவினர்களுக்கு டெலிபோன் பூத் மூலம் பேசும் வசதி செய்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் கைதிகளை உறவினர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு பார்க்கும் பட்சத்தில் அவர்களுக்கும் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டால் சிறைக்கைதிகள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து செல்போன் வீடியோகால் மூலம் உறவினர்களிடம் பேசுவதற்கான நடவடிக்கையை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஒவ்வொரு மத்திய சிறைகளுக்கும் தலா 8 நவீன செல்போன்கள் வாங்கி, அதன்மூலம் கைதிகளை அவர்களின் உறவினர்களிடம் பேச வைத்தனர். இதன்மூலம் கைதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் வீட்டில் இருந்தபடியே பார்த்து பேசி மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் ஒருபடி மேலாக, கம்ப்யூட்டர் மானிட்டரில் பார்த்து பேசும் வசதியை தமிழக அரசு மத்திய சிறைகளில் அறிமுகம் செய்துள்ளது.

நேற்றுமுன்தினம் முதல் இந்த வசதி அறிமுகமானது. 9 மத்திய சிறைக்கும் 126 கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டு, சிறையில் கைதிகள் அறைகளின் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. சேலம் மத்திய சிறையில் 8 கம்ப்யூட்டர்களும், கோவை மத்திய சிறையில் 15 கம்ப்யூட்டர்களும் பொருத்தப்பட்டன. இதன்படி 3 நாட்களுக்கு ஒரு முறை 12 நிமிட நேரம் குடும்பத்தினருடன் பேசலாம். ஒரு நிமிட நேரத்திற்கு 2 ரூபாய் 25 பைசா வசூலிக்கப்படும். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆரம்பத்தில் செல்போன் வீடியோ காலில் கைதிகள் உறவினர்களுடன் பேசினர். தற்போது மானிட்டரில் இணைக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினரை தெளிவாக பார்த்து பேச முடியும்’’ என்றனர்.

The post தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் வீடியோ காலில் கைதிகளுடன் பேசும் வசதி அறிமுகம்: சேலத்தில் 8 மானிட்டர்கள் பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Central Prisons ,Tamil Nadu ,Salem Salem ,Salem ,Klaichirai ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர்...