திருமலை : திருச்சானூரில் 8ம் நாள் பிரமோற்சவத்தையொட்டி மகா ரதத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா வந்து அருள்பாலித்தார். திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் பிரமோற்சவம் கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி அன்று காலை அம்மனுக்கு சுப்ரபாத சேவை, சகஸ்ர நாமார்ச்சனை, நித்ய அர்ச்சனை நடந்தது. பிரமோற்சவத்தின் 2ம் நாள் காலை பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் பத்மாவதி தாயார் எழுந்தருளி வலம் வந்தார்.
அதன் தொடர்ச்சியாக, பிரமோற்சவத்தின் 4ம் நாளில் ராஜமன்னார் அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, இரவு அனுமந்த வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாடவீதியில் எழுந்தருளினார். இந்நிலையில், 5ம் நாளில் பத்மாவதி தாயார் மோகினி அலங்காத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் வீதி உலா வந்தார். இதனை தொடர்ந்து இரவு கஜ வாகன சேவைக்காக ஏழுமலையான் கோயிலில் இருந்து தங்க லட்சுமி காசு மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பரிமோற்சவத்தின் 6ம் நாள் காலை பத்மாவதி தாயார் காலிங்கநர்தன கிருஷ்ணர் அலங்காரத்தில், சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 7ம் நாளான நேற்று முன்தினம் சூரிய பிரபை வாகனத்தில் கோவர்தனகிரி மலையை கையில் ஏந்தியபடி கிருஷ்ணராக பத்மாவதி தாயார் அருள்பாலித்தார். இரவு சந்திர பிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இந்நிலையில், பிரமோற்சவத்தின் 8வது நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட மகா ரதத்தில் (தேரில்) பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பக்தர்களின் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற முழக்கத்திற்கு மத்தியில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கோலாட்டம், பஜனை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தியபடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்கள் போல் வேடமணிந்தும் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட அஷ்வ வாகனம் (குதிரை வாகனத்தில்) பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்குமாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், பத்மாவதி தாயார் பிறந்த நட்சத்திரமான கார்த்திகை மாத பஞ்சமியான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. தீர்த்தவாரியையொட்டி பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பக்தர்களுக்காக கோயிலைச்சுற்றி பல இடங்களில் அன்னப்பிரசாத கவுன்டர்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் 188 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் குளத்தில் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் தனித்தனி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த பின் 48 மணி நேரத்திற்கு அந்த புனிதம் இருக்கும் என்பதால் பக்தர்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் பொறுமையாக காத்திருந்து புனித நீராடும்படி தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பஞ்சமி தீர்த்ததிற்கான ஏற்பாடுகள் குறித்து செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தலைமையில் அதிகாரிகள் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
The post திருப்பதி அடுத்த திருச்சானூரில் மகா ரதத்தில் பத்மாவதி தாயார் அருள்பாலிப்பு appeared first on Dinakaran.