கம்பம் : கம்பம் அருகே டூவீலர் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் நேற்று முன் தினம் இரவு பலியானார். மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார்.தேனி மாவட்டம், கம்பம், கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் ஆரிப் (20). இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சாதிக்பாஷா மகன் முஹம்மது தாஹா (20). இவர் உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இருவரும் நண்பர்கள்இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ஆரிப் வீட்டிலிருந்து டூவீலரில் முகமது தாஹாவுடன் புறப்பட்டார். கம்பம் மணிகட்டி ஆலமரம் செல்லும் புறவழிச் சாலை வழியாக சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் ஆரிப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முகமது தாஹா படுகாயமடைந்தார்.
அவரை அந்த பகுதியினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post கம்பத்தில் டூவீலர் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.