×

தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்கு கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது!!

சென்னை : ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனமானது (UNESCO – United Nations Educational Scientific and Cultural Organisation) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தி பாதுகாத்தமைக்கு 2024ம் ஆண்டிற்கான சிறப்பு விருதினை (2024 – Award of Distinction) வழங்கி சிறப்பித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், திருக்குளங்களை சீரமைத்தல், திருத்தேர்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த திருக்கோயில்களை அதன் பழமை மாறாமல் புதுப்பித்திட ஆண்டுதோறும் ரூ.100 கோடி வீதம் இதுவரை ரூ.300 கோடியினை அரசு மானியமாக வழங்கி உள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலானது சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையானதாகும். இத்திருக்கோயிலுக்கு இறுதியாக குடமுழுக்கு எப்போது நடைபெற்றது என்றே அறியப்படாத நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ரூ.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 03.09.2023 அன்று வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனமானது (UNESCO) 2024 ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதினை (2024 – Award of Distinction) தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தி பாதுகாத்தமைக்காக கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

The post தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்கு கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது!! appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Tukachi Apadsakayeswarar Temple ,Chennai ,United Nations Educational Scientific and Cultural Organization ,UNESCO ,Tukachi Arulmiku Apadsakayeswarar temple ,Thanjavur district ,Kumbakonam circle ,
× RELATED கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் கிராமத்தில் 11 சிறுவர்களுக்கு காய்ச்சல்!!