×

பெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் 1.50 லட்சம் கிலோ அரிசி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 8 வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்திலிருந்து, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 1.50 லட்சம் கிலோ அரிசியை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக அந்த வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், காரப்பாக்கம் கணபதி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, தாயகம் கவி, துணை மேயர் மகேஷ்குமர், முன்னாள் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் கலந்து கொண்டனர். இதே போல திமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

* ஒரு மாத ஊதியம் முதல்வர் வழங்கினார்
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமை செயலாளர் முருகானந்தத்திடம் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.

The post பெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் 1.50 லட்சம் கிலோ அரிசி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : DMK ,Benjal Cyclone ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Cyclone ,Benjal ,Villupuram ,Cuddalore ,Tiruvannamalai ,Krishnagiri ,Salem ,Puducherry ,M.K.Stalin ,Chennai Anna Vidyalaya, Chennai ,
× RELATED ஒவ்வொரு சொல்லிலும் அரசியல் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்