×

திருச்சியில் டிச.18ம் முதல் 27ம் தேதி வரை தமிழ் ஆட்சிமொழி வார கொண்டாட்டம்

 

திருச்சி, டிச.5: திருச்சி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித்துறை சார்பில் ஒரு வாரம் (டிச.18 முதல் டிச.27ம் தேதி) வரை ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது. தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட டிச.27ம் தேதி 1956 ஆண்டை நினைவுகூறும் வகையில் நடப்பாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 1 வாரம் கொண்டாட வேண்டும் என அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு ஆணையிட்டது. இதைத்தொடர்ந்து தமிழ் வளர்ச்சி இயக்குனர் ஆணைப்படி திருச்சி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் வரும் டிச.18 முதல் 27ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் ஒருபகுதியாக, ஆட்சிமொழி குறித்து டிச.18, 19 மற்றும் 20 ஆகிய நாட்களில் கணினித்தமிழ் மற்றும் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழிச்சட்ட அரசாணை, மொழிப்பயிற்சி, கலைச்சொல்லாக்கம், வரைவுகள், குறிப்புகள் எழுதுதல், முதலிய தலைப்புகளில் திருச்சி மாவட்ட மைய நூலகக் கூட்ட அரங்கில் அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சியும், டிச.23ம் தேதி இருங்களுர் எஸ்.ஆர்எம், டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் பங்கு பெறும் பட்டிமன்றமும்,

டிச.24ம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலத்துறை, வணிக நிறுவனங்களின் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி வணிகர் சங்கம் அலுவலகக் கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டமும், டிச.26ம் தேதி தமிழ் அமைப்புகள், நிர்வாகிகளுடன் இணைந்து மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டமும் நடைபெறவுள்ளது. ஆட்சிமொழிச் சட்டவார விழாவின் முக்கிய நிகழ்வாக டிச.27ம் தேதி காலை 9.30 மணிக்கு அரசுப் பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞா்கள், பள்ளி – கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும், மாவட்ட கலெக்டர் துவங்கி வைக்கும், ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி காந்தி சந்தை காவல் நிலையத்தில் தொடங்கி மேலரண் சாலை வழியாக தெப்பக்குளம் பிஷப்ஹீபர் மேனிலைப்பள்ளியில் நிறைவடைய உள்ளது. இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

The post திருச்சியில் டிச.18ம் முதல் 27ம் தேதி வரை தமிழ் ஆட்சிமொழி வார கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Language Week ,Trichy ,Tiruchi ,Tamil Development Department ,Trichy district ,Tamil Official Language Week ,
× RELATED திருச்சியிலிருந்து மதுரை வரையான...