×

பெஞ்சல் புயல், சீன எல்லை விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடுத்தடுத்து வெளிநடப்பு: மாநிலங்களவையில் பேச அனுமதி மறுப்பு

புதுடெல்லி: பெஞ்சல் புயல், சீன எல்லை விவகாரத்தில் மாநிலங்களவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரண நிதியாக உடனடியாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டுமென திமுக எம்பிக்கள் நேற்று விதி 267ன் கீழ் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். மேலும், விவசாயிகள் பிரச்னை, அதானி லஞ்ச விவகாரம், உபியின் சம்பல் வன்முறை போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்திருந்தன.

டெல்லி-நொய்டா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் பிரச்னையில் அரசு அக்கறை காட்ட வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எம்பிக்களின் கோரிக்கைக்கு அனுமதி தராமல் பூஜ்ய நேர அலுவல்களை எடுப்பதாக கூறினார். பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டதால், விவசாயிகள் பிரச்னை குறித்து பேச அனுமதி வழங்கினார். அப்போது பேசிய பிரமோத் திவாரி, ‘‘விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்துவதாக அளித்த வாக்குறுதியை அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார். ஆனால் ஒரு நிமிடம் மட்டுமே அனுமதி வழங்கிய அவைத் தலைவர், மற்ற எம்பிக்கள் பேச அனுமதிக்கவில்லை.

மேலும், விதி 267ன் கீழ் வழங்கப்பட்ட 5 நோட்டீஸ்களும் முறையாக இல்லை என அவற்றை ஏற்கவில்லை என அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதே போல, பிற்பகலிலுக்குப் பிறகு அவை கூடியதும் இந்தியா, சீனா எல்லை விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது, சீன எல்லை விவகாரத்தில் தங்களுக்கு உள்ள சந்தேகங்கள் குறித்து கேள்வி கேட்க எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால், அது அவை விதிமுறைகளுக்கு முரணானது என அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

The post பெஞ்சல் புயல், சீன எல்லை விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடுத்தடுத்து வெளிநடப்பு: மாநிலங்களவையில் பேச அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Benjal storm ,China border ,Rajya ,Sabha ,New Delhi ,Rajya Sabha ,Cyclone ,Benjal ,Cyclone Benjal ,Villupuram ,Chengalpattu ,Thiruvannamalai ,Salem ,Dharmapuri ,Kallakurichi ,Tamil Nadu ,
× RELATED பெஞ்சல் புயல் எதிரொலி: வெளுத்து வாங்கிய மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு