அந்த அறிவிப்பின்படி, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.21 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து முதல்வரும், துணை முதல்வரும் விடுதிகளை திறந்து வைத்து பார்வையிட்ட பின், அங்கு தங்கியுள்ள சிறப்பு மாணவ – மாணவியர்களிடம் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும், வேறு என்ன வசதிகள் தேவை என்றும் கேட்டனர். அதற்கு மாணவ, மாணவியர்கள் தேவையான வசதிகள் உள்ளது என்றும், விடுதியை அமைத்து தந்ததற்கு தங்களது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த விடுதி கட்டிடங்கள் சிறப்பு மாணவர்களுக்கு தனிக் கட்டிடமாகவும், சிறப்பு மாணவியருக்கு தனி கட்டிடமாகவும் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடங்கள் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 64,455 சதுர அடி கட்டிட பரப்பளவில் 38 மாணவர் அறைகள் மற்றும் 32 மாணவியர் அறைகளுடன், 114 மாணவர்களும், 96 மாணவியர்களும் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இச்சிறப்பு மாணவ, மாணவியருக்கான விடுதிகளின் அனைத்து தளங்களிலும் தொட்டுணரக்கூடிய வழிகாட்டும் மேற்பரப்பு குறிகாட்டிகளுடன் கூடிய தரை அமைப்பு, பார்வையற்ற சிறப்பு மாணவர்களுக்கான பிரெய்லி பலகைகள் (அணுகக்கூடிய வடிவங்களில் வழி கண்டறிதல் மற்றும் தகவல் அடையாளங்கள் பொருத்தப்பட்டுள்ளன) அனைத்து அறையிலும் அவசர அழைப்பு மணி பொருத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறையிலும் சிறப்பு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வகை அலமாரிகள், அனைத்து அறைகளிலும் ஸ்மார்ட் லாக், பிரத்யேக சாய்தள அமைப்பு, ஒவ்வொரு குளியலறை மற்றும் கழிவறைகளில் அவசரக் குறியீடு விளக்குகள், கழிவறைகளில் சிறப்பு வைகிராப் பார்கள் நான்கு மின்தூக்கிகளிலும் ஒலி மற்றும் ஒளி அமைப்பான்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இக்கட்டிடம், காப்பாளர் அறைகள், அலுவலக அறைகள், உணவு உண்ணும் அறைகள், பொது அறைகள், சமையலறை போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, உயர்கல்வித்துறை செயலாளர் கோபால், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சிறப்பு மாணவ, மாணவிகளுக்கான விடுதி கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.