குன்றத்தூர்: குன்றத்தூரில் நேற்றிரவு நண்பர்களுடன் ஏற்பட்ட மதுபோதை தகராறில், ஒரு வாலிபரின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நண்பர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை அருகே குன்றத்தூர், ஒண்டி காலனி, அக்னீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (29). கார் டிரைவர். இவர் நாள்தோறும் வேலை முடிந்ததும், இரவில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அதேபோல் நேற்றிரவு விஜய் வேலை முடிந்து, தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் ஒரு காலி இடத்தில் தனது நண்பர்கள் சிலருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, அவர்களுக்குள் மதுபோதையில் ‘யார் பெரியவன்’ என்பது குறித்து வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமான நண்பர்கள், அருகில் கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து விஜய்யின் தலையில் தூக்கிப் போட்டு, படுகொலை செய்துள்ளனர். இதனால் விஜய் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவர் இறந்ததை உறுதி செய்ததும் விஜய்யின் நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் விஜய்யின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரிக்கின்றனர். விஜயின் நண்பர்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே அவரது கொலைக்கான முழு விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
The post குன்றத்தூரில் மதுபோதையில் தகராறு வாலிபரின் தலையில் கல்லை போட்டு படுகொலை: நண்பர்களுக்கு வலை appeared first on Dinakaran.