காரைக்குடி, டிச. 4: காரைக்குடி பகுதியில் மாடுகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்தனர். காரைக்குடி நகர் பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. நகர் பகுதியில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்நிலையில் வளர்க்க போதிய இடம் இல்லாததாலும் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் இல்லாததாலும் சாலைகளில், கால்நடைகள் தஞ்சம் அடைகின்றன.
மேலும் சாலையோரங்களில் வீசப்படும் உணவு பொருட்கள், குப்பைகளில் உள்ள உணவு பொருட்களை கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன. அதேநேரத்தில் கூட்டமாக சாலைகளில் கால்நடைகள் உலா வருவதால் ஏதாவது ஒரு மாட்டுக்கு வரும் நோய் அனைத்து மாடுகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் காரைக்குடி பகுதியில் தற்போது மாடுகளுக்கு அம்மைநோய் வேமாக பரவி வருகிறது. இதில் 4 மாதங்களுக்கு உட்பட்ட சிறிய கன்றுகள் இறந்து போகும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
பெரிய மாடுகளுக்கு இந்நோய் வரும் பட்சத்தில் அதிக காய்ச்சல், உடல் முழுவதும் புண்களுடன் காணப்படுகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று கால்நடை பராமரிப்பு துைற இணை இயக்குனர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி செலுத்தினர். இதனால், கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post காரைக்குடி பகுதியில் மாடுகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி: கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி appeared first on Dinakaran.