புதுடெல்லி: தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற விவகாரத்தில் முன்னதாக வழங்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கே.ஏ.பால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘தற்போது தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடத்த முடியும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் கூறியுள்ளார்.
அதேபோல இந்திய அரசியல் தலைவர்களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து கடந்த மாதம் 26ம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் கே.ஏ.பால் உச்ச நீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே வி.வி.பேட் தொடர்பான விவகாரத்தில் முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பை ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post வாக்குச்சீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் appeared first on Dinakaran.