சண்டிகர்: சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் 100 சதவீதம் அமல்படுத்தப்பட்டதை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய அதிநியாம் ஆகிய சட்டங்கள் கடந்த ஜூலை 1ம் தேதி நடைமுறைக்கு வந்தன.
இந்த 3 புதிய சட்டங்களையும் நாட்டில் முதல் முறையாக சண்டிகர் யூனியன் பிரதேசம் 100 சதவீதம் அமல்படுத்தி உள்ளது. இதற்கான விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 3 புதிய குற்றவியல் சட்டங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘புதிய குற்றவியல் சட்டங்கள் அனைத்து மக்களின் நலனுக்காக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கான உறுதியை காட்டுகின்றன.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த பழைய 3 சட்டங்களின் நோக்கம், இந்தியர்களைத் தண்டிப்பதும் அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதுமே. இன்று புதிய சட்டங்களின் வரவு, காலனித்துவ காலச் சட்டங்களின் முடிவைக் குறிக்கின்றன’’ என்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘நமது குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக நவீன அமைப்பாக இருக்கும். புதிய குற்றவியல் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தியதற்காக சண்டிகர் நிர்வாகத்திற்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்’’ என்றார்.
The post இந்தியாவில் முதல் முறையாக 3 புதிய குற்றவியல் சட்டங்கள் சண்டிகரில் 100 சதவீதம் அமல்: நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.