புயல் நிவாரண நிதி உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்


சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தாக்கியதால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. எனவே, ஒன்றிய உள்துறை அமைச்சர், மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்றார்.

திருநெல்வேலியில் உணவு பூங்கா: மாநிலங்களைவையில் திமுக எம்பி கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தமிழ்நாடு அரசின் முயற்சியால், ஒன்றிய அரசின் மானியமாக ₹23 கோடி உதவியுடன் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியத்தின் சார்பில் ₹77 கோடியில் திருநெல்வேலியில் மெகா உணவுப் பூங்கா அமைய உள்ளது. விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை: மக்களவையில் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வாணியம்பாடியில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைப்பதற்கு இஎஸ்ஐ கார்ப்பரேஷன் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

The post புயல் நிவாரண நிதி உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: