புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வென்று பா.ஜ கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்பிக்கள் அபிஷேக் சிங்வி, முகுல்வாஸ்னிக், காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே, உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து குறைகளை தெரிவித்தார்கள். அதன்பின் அவர் கூறியதாவது: எங்கள் குற்றச்சாட்டுப்படி மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடந்த 5 மாத கால இடைவெளியில் மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டது குறித்து ெதரிவித்தோம்.
உதாரணமாக ஒரே இடத்தில் 250 பெயர்களை ஒரே ஊழியர் நீக்கியது குறித்து கேள்வி எழுப்பினோம். மகாராஷ்டிரா முழுவதும் ஒரு தொகுதிக்கு சுமார் 10,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த குறுகிய காலத்தில் மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் 47 லட்சம் பெயர்களை சேர்த்தது எப்படி என கேள்வி எழுப்பினோம். ஆனால் சேர்த்த எண்ணிக்கை 39 லட்சம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. அது சிறிய எண்ணிக்கையல்ல. வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி பட்டியலில் இணைத்திருக்க வேண்டும். அதுதொடர்பான மூலத் தரவை நாங்கள் கேட்டுள்ளோம். அடுத்த குற்றச்சாட்டு, ஓட்டுப்பதிவு நடந்த நவம்பர் 20 அன்று மாலை 5 மணிக்கு 58 சதவீதமாக இருந்தது. ஆனால் இரவு 11:30 மணிக்கு 65.02 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்தனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
2 நாட்களுக்குப் பிறகு, இது 66.05 சதவீதமாக உயர்ந்தது. அதாவது 7 சதவீத வித்தியாசம் அதிகரித்தது. இது சுமார் 76 லட்சம் வாக்காளர்கள் ஆகும். இவ்வளவு குறுகிய நேரத்தில் இவ்வளவு வாக்காளர்கள் ஓட்டு போட்டதாக கூறியிருப்பதால், அதற்கான ஆதாரங்களை நாங்கள் கேட்டு இருக்கிறோம்.அதே போல் பா.ஜ மட்டும் தனியாக வென்ற 102 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களவை தேர்தலை விட, சட்டப்பேரவை தேர்தலில் தலா 25,000 வாக்குகள் அதிகரித்துள்ளது. இது இயற்கைக்கு மாறானது. இதற்கு மூல ஆதாரம் தேவை என்று கேட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post மகாராஷ்டிராவில் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு 76 லட்சம் வாக்குகள் அதிகரித்தது எப்படி?.. தேர்தல் ஆணையத்திடம் நேரில் விளக்கம் கேட்டது காங்கிரஸ் appeared first on Dinakaran.