திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 15ம் தேதி மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். கடந்த 1 வாரத்தில் மட்டும் சபரிமலையில் 5.35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து குமுளியிலிருந்து முக்குழி, சத்ரம் வனப்பாதை வழியாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரி இந்த தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் மழை குறைந்ததை தொடர்ந்து இன்று முதல் இந்தப் பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி அளித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சபரிமலையில் வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு டோலியில் சென்று வருகின்றனர். டோலிக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கு 1500க்கும் மேற்பட்ட டோலி தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். இதனால் டோலியில் செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். பின்னர் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
The post சபரிமலையில் 1 வாரத்தில் 5.35 லட்சம் பேர் தரிசனம்: குமுளி வனப்பாதையில் இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி appeared first on Dinakaran.