பாலக்காடு: கேரள மாநிலம், ஒத்தப்பாலம் அருகே புதிய சொகுசு காரில் வேட்டை துப்பாக்கியுடன் சுற்றிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம், மாவட்டம் கருவாரக்குண்டு அருகே நிலாஞ்சேரியை சேர்ந்தவர் அப்துல் சலாம் (38). மலப்புரம் மாவட்டம், வண்டூரை சேர்ந்தவர் ஜமால் ஹூசைன் (25). இவர்கள் புதிய ஆடம்பர காரில் மலப்புரத்தில் இருந்து ஒத்தப்பாலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒத்தப்பாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீஷ் தலைமையிலான போலீசார் ஒத்தப்பாலம் மாயனூர் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரில் வந்த அப்துல் சலாம், ஜமால் ஹூசைன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனையிட்டனர். அப்போது காரின் பின் சீட்டிற்கு அடியில் வேட்டை துப்பாக்கி மூன்று பகுதிகளாக துணியில் மடித்து வைக்கப்பட்டிருந்ததையும், துப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டுகள், ஹெட்லைட், டிரில்லர் இயந்திரங்கள், கத்திகள் என ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் மாயனூர் சேலக்கரை பகுதியில் அமைந்துள்ள காடுகளில் வன விலங்குகளை வேட்டையாட வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரையும் ஒத்தப்பாலம் போலீசார் கைது செய்தனர்.
The post சொகுசு காரில் துப்பாக்கி, பயங்கர ஆயுதத்துடன் சுற்றிய 2 பேர் கைது appeared first on Dinakaran.