அரசு பஸ் மீது கார் மோதல்; மருத்துவ மாணவர்கள் 5 பேர் நசுங்கி பலி: 6 மாணவர்கள் படுகாயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் நேற்று இரவு கேரள அரசு பஸ் மீது கார் மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள வண்டானம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு படிக்கும் 11 மாணவர்கள் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் சினிமா பார்ப்பதற்காக ஒரு வாடகை காரில் ஆலப்புழாவுக்கு சென்றனர். இந்த சமயத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.

ஆலப்புழா சங்கனாச்சேரி முக்கு பகுதியில் கார் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குருவாயூரில் இருந்து காயங்குளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் மீது கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் பஸ்சின் அடிப்பகுதிக்குள் சிக்கிக்கொண்டது. இதில் அந்தக் கார் முற்றிலுமாக உருக்குலைந்தது. விபத்தைப் பார்த்ததும் அந்த பகுதியினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கார் முழுவதுமாக உருக்குலைந்திருந்ததால் அதில் சிக்கியிருந்தவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் வந்த பின்னர் தான் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்க முடிந்தது.

இந்த விபத்தில் மலப்புரம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த தேவநந்தன் (19), பாலக்காடு சேகரீபுரத்தைச் சேர்ந்த தேவ் வல்சன் (19), கோட்டயத்தைச் சேர்ந்த ஆயுஷ் ஷாஜி (19), லட்சத்தீவை சேர்ந்த முகம்மது இப்ராகிம் (19), கண்ணூரை சேர்ந்த முகம்மது அப்துல் ஜப்பார் (19) ஆகிய 5 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.இதில் படுகாயம் அடைந்த 6 மாணவர்கள் உடனடியாக ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பஸ்சில் இருந்த 15 பயணிகளும் காயமடைந்தனர். அவர்களும் ஆலப்புழா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கார் அதிவேகமாக சென்றதும், பலத்த மழையும் தான் விபத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ஆலப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு பஸ் மீது கார் மோதல்; மருத்துவ மாணவர்கள் 5 பேர் நசுங்கி பலி: 6 மாணவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: