புதுவையில் 40 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு: 2வது நாளாக மீட்கும் பணி தீவிரம்

புதுச்சேரி: பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, புதுச்சேரியில் கடந்த 30ம் தேதி வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாளில் 48.4 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரப்பகுதியே வெள்ளத்தில் மூழ்கியது. இருப்பினும், ஒரே நாளில் வெள்ளநீர் வடிந்ததால் நேற்று முதல் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். அதே சமயம், தமிழகத்திலும் கனமழை பெய்ததால் சாத்தனூர் அணையில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள புதுச்சேரிக்கு உட்பட்ட பாகூர், ஆராய்ச்சிக்குப்பம், கொம்மந்தான்மேடு, சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளஞ்சந்தை, திருப்பனாம்பாக்கம், இரண்டாயிரம் விளாகம், பரிக்கல்பட்டு உள்ளிட்ட 40 கிராமங்களில் ஆற்று வெள்ளம் புகுந்து மக்கள் தத்தளித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் 2வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாகூர் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணமாக தலா ₹5 ஆயிரம் வழங்கப்படும். மழை பாதிப்பால் உயிரிந்த 4 பேரின் குடும்பத்துக்கும் தலா ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். 10 ஹெக்டேர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஒரு ஹெக்டேருக்கு ₹30 ஆயிரமும், இறந்த பசு மாடுகளுக்கு தலா ரூ.40 ஆயிரமும், இறந்த கன்றுகளுக்கு ₹20 ஆயிரமும், சேதமடைந்த படகுகளுக்கு தலா ₹10 ஆயிரமும், இடிந்து விழுந்த கூரை வீடுகளுக்கு தலா ₹15 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

The post புதுவையில் 40 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு: 2வது நாளாக மீட்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: